தமிழகம்

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ குதிரைபேர வழக்கு: தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி/சென்னை: ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக காவல்துறை விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் விவகாரத்தில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோர் மீது திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

உயர் நீதிமன்றம் தடை

இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், வழக்கு விசாரணையை சிபிஐ.க்கு மாற்றக் கோரி கரூர் ரமேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக காவல்துறை மேற்கொள்ளும் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

தலைமை நீதிபதி அமர்வு விசாரணை

இந்நிலையில் தமிழக காவல் துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்‌ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசார ணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறை விசாரணைக்கு தடை விதித்துள்ளதால், அந்த தடையை நீக்க வேண்டும்’ என வலியுறுத்தினார்.

அரசியல் விளையாட்டுகள்...

அதற்கு பதிலளித்த நீதிபதிகள், ‘‘தற்போதைய நிலையில் எந்தவொரு இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. முதலில் வழக்கை முழுமையாக விசாரிக்க வேண்டியது அவசியம்’’ என்று தெரிவித்ததோடு, வழக்கில் எதிர்மனுதாரர்களான கரூர் ரமேஷ், சேதுராஜ் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.

மேலும், ‘‘அரசியல் குற்றச்சாட்டுகள், அரசியல் விளையாட்டுகள் என்பது யார் ஆட்சிக்கு வந்தாலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன’’ என சிரித்தபடியே கருத்து தெரிவித்து, வழக்கை ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT