தாம்பரம் தொகுதியில் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் மருத்துவர் கிருத்திகா தேவி.

 
தமிழகம்

தாம்பரம் தொகுதியில் தகிக்கும் வெயிலிலும் தளராத பிரச்சாரம்

பெ.ஜேம்ஸ்குமார்

சென்னையின் நுழைவு வாயிலான தாம்பரம் தொகுதியை தனதாக்கும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன.

இங்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உட்பட 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

திமுக - மருத்துவர் ஆர்.எஸ்.கிருத்திகா தேவி

தாம்பரம் தொகுதியில் பல்வேறு இடங்களில் திமுக வேட்பாளர் கிருத்திகா தேவி, கூட்டணிக் கட்சி நிர்வாகி களுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

          

திமுக அரசின் ஐந்தாண்டு சாதனை திட்டங்கள் குறித்தும், தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறியும் பிரச்சாரம் செய்தார்.

என்னை எம்எல்ஏ.வாக தேர்ந்தெடுத்தால் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து பிரச்சினைகளைக் கேட்டறிந்து தீர்வுகாண பாடுபடுவேன் என உறுதியளித்து பிரச்சாரம் செய்கிறார்.

அதிமுக - சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன்

கூட்டணிக் கட்சியினர் புடைசூழ பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் வீடு இல்லாதோருக்கு வீடு மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கப்படும்.

மாடம்பாக்கம் பகுதியில் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனுக்கு மலர்கிரீடம் அணிவித்து வரவேற்ற நிர்வாகிகள்.

பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தொடங்கப்படும். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அனைத்து வசதிகளுடன் அரசு பள்ளிகள் மேம்படுத்தப்படும் என்று உறுதியளித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

நாம் தமிழர் கட்சி - பேராசிரியர் சு.தமிழ்செல்வி

தொகுதி முழுவதும் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்துவரும் நாதக வேட்பாளர் பேராசிரியர் சு.தமிழ் செல்வி, நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தார்.

சேலையூர் பகுதியில் நடந்துசென்று வாக்குச் சேகரித்த நாம் தமிழர் வேட்பாளர் பேராசிரியர் சு.தமிழ்செல்வி

செம்பாக்கத்தில் தவெக வேட்பாளர் சரத்குமாரை மலர்தூவி வரவேற்ற தொண்டர்கள்.

மேலும் கட்டணமில்லாமல் குடிநீர், கல்வி, மருத்துவம் கொடுப்போம் என்று கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்.

தமிழக வெற்றிக்கழகம் - ‘கில்லி’ சரத்குமார்

இளைஞர்கள் புடைசூழ தொகுதியில் வலம்வரும் தவெக வேட்பாளர் சரத்குமார், லஞ்சம் இல்லாத நேர்மையான ஆட்சி அமைந்திட, கிராமங்களில் அடிப்படை சுகாதார வசதிகள் கிடைத்திட தனக்கு வாக்களிக்கும்படி கேட்டு வருகிறார்.

மேலும், அனைத்து பள்ளி, கல்லூரிகளில், போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள், கல்வி உத்தரவாத திட்டம், பிளஸ் 2 முதல் பி.எச்டி, வரை கல்வி பயில, ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கடன் என பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தாம்பரம் தொகுதியில் வேட்பாளர்களின் பிரச்சாரமும் தீவிரமடைந்து வருகிறது.

SCROLL FOR NEXT