புதுடெல்லி: உன்னாவ் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற குல்தீப் சிங் செங்காரின் தண்டனையை சஸ்பெண்ட் செய்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம். மேலும், அவருக்கு நிபந்தனை ஜாமீனும் அளித்துள்ளது நீதிமன்றம்.
கடந்த 2017-ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் பங்கார்மாவு தொகுதி பாஜக எம்எல்ஏ-வாக இருந்த குல்தீப் சிங் செங்கார், சிறுமி ஒருவரை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் செங்காரைக் கைது செய்தனர். தொடர்ந்து பாஜகவில் இருந்தும் செங்கார் நீக்கப்பட்டார்.
இதற்கிடையே வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் உட்பட உறவினர்கள் சிலர், வழக்கறிஞருடன் ரேபரேலியில் உள்ள உறவினரைச் சந்திக்கச் சென்றபோது லாரி ஒன்று இவர்கள் காரின் மீது மோதியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர், பாதிக்கப்பட்ட சிறுமி படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார். அவர் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதையடுத்து சிறுமி பலாத்கார வழக்கு மற்றும் விபத்து ஏற்படுத்திய வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டது. குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்ட 10 பேர் மீது கொலை, சதி, கொலை முயற்சி ஆகிய பிரிவுகளில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் டெல்லிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து குல்தீப் சிங் செங்கருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் செவ்வாய்க்கிழமை அன்று குல்தீப் சிங் செங்காருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்தது. மேலும், அவருக்கு நிபந்தனை ஜாமீனும் அளித்துள்ளது. இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை கொலை செய்த வழக்கில் அவர் தண்டனையை அனுபவித்து வருகிறார். அந்த தண்டனையையும் சஸ்பெண்ட் செய்ய கோரி அவர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டெல்லி இந்தியா கேட் பகுதியில் பாதிக்கப்பட்ட பெண், அவரது தாயார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் அங்கிருந்து விலக்கினர்.