தமிழகம்

“தமிழகத்தில் இண்டியா கூட்டணி இன்னும் சரியாக அமையவில்லை” - எல்.முருகன்

அ.முன்னடியான்

புதுச்சேரி: “தமிழகத்தில் இண்டியா கூட்டணி இன்னும் சரியாக அமையவில்லை. ஆனால், எங்கள் கூட்டணியின் பிரம்மாண்டமான கூட்டத்தை நடத்திக் காட்டியுள்ளோம்” என்று” என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கி செல்கின்ற பட்ஜெட். நம்முடைய கனவு, ஒவ்வொருவருடைய எதிர்காலத்தை பூர்த்தி செய்கின்ற பட்ஜெட். அப்துல் கலாம் கண்ட கனவு, லட்சியம் 2047-ல் நாம் வல்லரசாக வேண்டும் என்பதை நோக்கிய பட்ஜெட்டாக இது இருக்கிறது. இந்த பட்ஜெட்டை கொடுத்த பிரதமர், நிதியமைச்சருக்கு நன்றி” என்றார்.

          

அப்போது, புதுச்சேரிக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா? என்று கேட்டதற்கு, “மத்திய பட்ஜெட் மீதான விவாதம் இம்மாதம் 9-ம் தேதி தான் தொடங்குகிறது. அதன் பிறகுதான் ஒவ்வொரு மாநிலத்துக்கும், துறைக்கும் எவ்வளவு நிதி என்பது இறுதி செய்யப்படும். மேலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை நிதி ஆணையத்தில் இணைக்கவும் வலியுறுத்துவோம்” என்றார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என்று முதல்வர் பேசி வருவது குறித்து கேட்டபோது, "இந்தியா முழுவதும் இன்றைக்கு மத்திய பட்ஜெட் சம்பந்தமான செய்தியாளர் சந்திப்பு நடக்கிறது. ஆகவே அதைப் பற்றி மட்டுமே பேசுங்கள்" என்றார்.

பின்னர், தொழிற்சாலைகள் அதிகளவில் வந்தாலும் மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறதே என்று கேட்டதற்கு, “இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு 6 ஆயிரம் பேர் அரசு பணிக்கு நேரடி நியமனம் மூலம் சென்றுள்ளனர். 800 ஏக்கரில் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது. அதில் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வருவதற்கான திட்டத்தை நிறைவேற்ற இருக்கின்றோம்” என்றார்.

தொடர்ந்து, புதுச்சேரி - சென்னை கப்பல் போக்குவரத்து தொடர்பாக கேட்டபோது, “நீர்வழிப் போக்குவரத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ளது. இதில் பிரதமரும் மிகவும் கவனமாக இருக்கின்றார். எங்கெல்லாம் வாய்ப்புகள் இருக்கிறதோ அங்கெல்லாம் 2047-க்குள் 12 சதவீதம் நீர்வழிப் போக்குவரத்து செய்யப்படும்” என்றார்.

சென்னை - கடலூர் இசிஆர் ரயில் வழித்தடம் நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது குறித்து கேட்டபோது, “ஒடிசா - ஆந்திரா, தமிழகம், கேரளா ஆகிய பகுதிகளில் போக்குவரத்து முழுமையாக மேம்படுத்தப்படும். சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தே பாரத் ரயில் கூடிய விரைவில் இயக்குவதற்கான சாத்தியகூறுகள் இருக்கிறது” என்றார்.

புதுச்சேரிக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுமா என்ற கேள்விக்கு, “வாய்ப்பு இருக்கும் அனைத்து இடங்களிலும் இயக்கப்படும்” என்று கூறினார்.

பிரதமர் வெளிநாடு செல்லும்போது பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஆனால் நாடாளுமன்றத்திலேயே அவருக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறப்படுவது குறித்து கேட்டபோது, “இது சம்பந்தமாக நாடாளுமன்ற சபாநாயகர் அங்கு நடந்தது குறித்து தெளிவாக சொல்லியுள்ளார். அதனால் பட்ஜெட் சம்பந்தமாக மட்டுமே பேசலாம்” என்றார்.

புதுச்சேரிக்கு பிரதமர் வருகை தருவாரா என்று கேட்டபோது, “கடந்த 23-ம் தேதி மதுராந்தகம் வந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் மிகப் பெரிய கூட்டத்தை நடத்திவிட்டு சென்றுள்ளார். அது தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கி உள்ளது. கண்டிப்பாக தமிழகம், புதுச்சேரிக்கு பிரதமர் வருவார்” என்றார்.

பின்னர், என்டிஏ கூட்டணியில் தேமுதிக போன்ற கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதா என்று கேட்டபோது, “எல்லா கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எந்தெந்த கட்சிகள் வருகிறது என்று பொருத்திருந்து பார்ப்போம்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மத்திய பட்ஜெட் வரவுள்ள 5 மாநில தேர்தலில் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கேட்டபோது, “நாட்டின் வளர்ச்சிகாகவே மத்தியில் ஆளும் பாஜக அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. தேர்தலுக்காக அல்ல.

5 மாநிலங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப் பெரிய அளவில் வெற்றி பெறும். குறிப்பாக தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி உறுதி செய்யப்பட்ட ஒன்று. திமுக வீட்டுக்கு செல்வதும் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று.

தமிழகத்தில் இண்டியா கூட்டணி இன்னும் சரியாகக் கூட்டணி அமைக்கவில்லை. ஆனால், எங்கள் கூட்டணியின் பிரமாண்டமான கூட்டத்தை நடத்திக்காட்டி உள்ளோம். அனைத்து தலைவர்களும் மேடை ஏறியதை எல்லோரும் பார்த்தோம். எங்கள் கூட்டணி மிகவும் வலிமையான கூட்டணி. தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கூட்டணி” என்று எல்.முருகன் பதில் அளித்தார்.

SCROLL FOR NEXT