திருமாவளவன்
சென்னை: ‘மயிலாடுதுறையில் புதிய எண்ணெய் கிணறுகள் தோண்ட ஒன்றிய அரசு அனுமதிக்க கூடாது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஒன்றிய அரசு அனுமதி வழங்குவதை மாநில அரசு தடுத்திட வேண்டும்’ என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘மயிலாடுதுறை கடற்கரையிலிருந்து கடலுக்குள் சுமார் 81 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள பிஒய்-3 எண்ணெய் வயலில் ஐந்து புதிய எண்ணெய் கிணறுகளைத் தோண்டுவதற்காக, தனியார் நிறுவனமான ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் அன்ட் புரொடக்ஷன் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி சமீபத்தில் விண்ணப்பித்துள்ளது.
இத்தகைய எண்ணெய் கிணறுகள் அமைக்க நடத்தப்படும் நில அதிர்வு ஆய்வுகள் மீன்களின் உணர்வு அமைப்பைப் பாதிப்பதாலும், கிணறுகளிலிருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகளாலும் மீன்வளம் முற்றிலும் அழியும் அபாயம் உள்ளது. அதோடு, இந்தப் பகுதி கடல் ஆமைகள், பவளப்பாறைகள் மற்றும் மீன் இனப்பெருக்கம் நடைபெறும் சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதியாகும். இங்கு கிணறுகளைத் தோண்டுவது கடல் சூழல் பாதுகாப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானதாகும்.
ஏற்கெனவே உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர் வெளியே எடுக்கப்படுவதால் மயிலாடுதுறை, குத்தாலம், கதிராமங்கலம் பகுதிகளில் நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் புதிய கிணறுகள் அனுமதிக்கப்பட்டால் வேளாண் மக்கள் மிகப்பெரும் பாதிப்புக்குள்ளாவர்.
தமிழ்நாட்டின் டெல்டாப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி மக்கள் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் இதுபோன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளால் அப்பகுதி மக்கள் தொடர் இன்னலுக்கு ஆளாகின்றனர். 1997 முதல் செயல்படும் எண்ணெய் மற்றும் இயற்கை வாயுக் கழகத்தின் (ONGC) கிணறுகளால் கதிராமங்கலம், திருவேள்விக்குடி கிராமங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எண்ணெய் வளத்தைப் பெருக்கும் வளர்ச்சி நடவடிக்கை என்ற தோற்றத்தை ஏற்படுத்தினாலும், உண்மையில் இது நிலையான வருவாயை ஈட்டித் தந்து எளிய மக்களின் வாழ்வாதாரத்தை வழங்கும் வேளாண் வளத்தையும் மீன்வளத்தையும் அழிக்கும் அபாய முயற்சியாகும். எனவே, ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தை அனுமதிக்க கூடாது.
மயிலாடுதுறை மாவட்டம் தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, ஒன்றிய அரசு எந்தச் சூழலிலும் இத்திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்பதைத் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.
எண்ணெய் மற்றும் எரிவாயு உரிமம் பெறுவதற்கு OALP (Open Acreage Licensing Programme) என்னும் முறையை 2017-இல் ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தியது. இதன் மூலம் இதுபோன்ற எரிவாயு மற்றும் எண்ணெய் கிணறுகள் தோண்டும் தொகுதியைத் தேர்வு செய்யும் உரிமை அரசிடமிருந்து எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
எரிவாயுவுக்கும் எண்ணெய்க்கும் தனித்தனி உரிமம் என்பதும் மாற்றப்பட்டு இரண்டுக்கும் சேர்த்து ஒரே உரிமம் எனத் திருத்தப்பட்டதோடு, நிறுவனங்களே விலையினையும் நிர்ணயிக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டது. இத்தகைய உரிமங்கள் வழங்குவதில் மாநிலங்களுக்கு உரிய அதிகாரம் இருக்கும் வகையில் இந்த OALP முறை முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.' எனத் தெரிவித்துள்ளார்.