தமிழகம்

தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ‘அரசு நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரமும், அதைத் தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வேண்டும் என மத்திய அரசின் அறிவிப்பாணையில் வற்புறுத்தவில்லை’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழத்து பாடி துவங்குவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ‘தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள், தமிழ்த்தாய் வாழ்த்து பாடி துவங்கப்படுவதும், தேசிய கீதம் இசைத்து நிறைவு செய்வதும் பல ஆண்டுகளாக மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகே, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது.

அரசு நிகழ்ச்சியை வந்தே மாதரம் பாடியே துவங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 28-ம் தேதி பிறப்பித்து சுற்றிக்கையில், மாநில பாடலை பாடி அரசு நிகழ்ச்சியை துவங்க எந்த தடையையும் விதிக்கவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது வெறும் சடங்கு அல்ல. அது தமிழர்களின் உணர்வு, கலாச்சாரம் மற்றும் அடையாளமாக உள்ளது.

எனவே, வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வலியுறுத்தி, மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். எதிர்காலத்தில் அரசு நிகழ்ச்சிகளில் இந்த கலாச்சார மோதலை தவிர்க்கும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கு தகுந்த நிர்வாக அறிவுறுத்தல்களை பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ‘மத்திய உள்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பாணையை பிறப்பித்துள்ளதால், இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல’ எனத் தெரிவித்தார்.

மேலும், ‘மத்திய அரசு அறிவிப்பாணையில், அரசு நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரமும், அதை தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வேண்டும் என அறிவிப்பாணையில் வற்புறுத்தவில்லை’ எனக் குறிப்பிட்டார்.

மத்திய அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT