பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் உறவினர் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை சந்தித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தார். தவெக அரசின் மீது அதிமுக தொடர் குற்றச்சாட்டுகளை கூறி வரும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழக வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையனின் உறவினரான பொள்ளாச்சியை சேர்ந்த மருத்துவர் முருகானந்தம் இல்ல திருமண விழா இன்று காலை பொள்ளாச்சி தாராபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.
இவ்விழாவில் மருத்துவர் முருகானந்தத்தின் நண்பர்களான எஸ்.பி.வேலுமணி மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சரும் தற்போது தவெக கட்சியின் துணை பொதுச் செயலாளருமான உடுமலை ராதாகிருஷ்ணன், மற்றும் முன்னாள் அதிமுக எம்.பியும், தற்போது தவெக கட்சியின் திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான சி.மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருமண விழாவில் எஸ்.பி. வேலுமணியிடம் அமைச்சர் செங்கோட்டையன் அருகே அமர்ந்து நீண்ட நேரம் பேசி கொண்டிருந்தார். இதையடுத்து சுமார் 20 நிமிடங்கள் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய பின்னர் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை, விலைவாசி உயர்வு, பெண்கள் பாதுகாப்பு, தொடர் கொலைகள் என தவெக அரசு மீது அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், அக்கட்சியின் முக்கிய தலைவர்களின் ஒருவரான எஸ்.பி.வேலுமணியை வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசியது அப்பகுதி அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தவெக அரசு அமைந்து 6 மாதங்களை கடந்து விட்ட நிலையில், தவெக அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் வருவதற்கான அரசியல் சூழல்கள் உள்ளதாக கூறப்படும் நிலையில், எஸ்.பி.வேலுமணி மற்றும் செங்கோட்டையன் இடையே நடைபெற்ற சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த தவெக கட்சியினர் கூறும்போது, ;‘திருமண விழாவில் கலந்து கொண்ட செங்கோட்டையன் உள்ளிட்ட நான்கு பேர் ஒரே கட்சியில் பயணித்தவர்கள், அரசியல் நாகரிகம் மற்றும் நட்பின் அடிப்படையில் பேசி இருப்பார்கள். இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை’ என்றனர்.
இது குறித்து அதிமுகவினர் கூறும்போது, ‘திருமண விழாக்களில் அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்துக் கொண்டால் நாகரிகம் கருதி பேசுவது இயல்பு. இந்த சந்திப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியமில்லை’ என்றனர்.