சென்னை: தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் நிர்மல்குமாரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விமர்சித்ததால், பதிலுக்கு நிர்மல்குமாரும் உதயநிதியை விமர்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் மின்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் திமுக எம்எல்ஏ வி.செந்தில்பாலாஜி பேசியதாவது: தமிழகத்தில் கடந்த 2021-ல் மின் நிறுவு திறன் 32,595 மெகா வாட்டாக இருந்தது. இது தற்போது 46,846 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது. மின் தேவை உயர்ந்த பதிலும் அதற்கான கட்டமைப்பை உருவாக்கி, அதற்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றியவர் அப்போதைய முதல்வர் ஸ்டாலின்.
லட்சக்கணக்கான மின் நுகர்வோர் தங்கள் மின்கட்டணம் உயர்ந்து இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். மின்வாரிய தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் 3.70 லட்சம் மின் நகர்வோருக்கு மின் கட்டணம் மறு ஆய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர் ஒரு கருத்தும், நிர்வாகம் ஒரு கருத்துமாக வெளியிடுகின்றனர். அமைச்சரும், நிர்வாகமும் ஒன்று சேர்ந்து மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும்.
மின்வாரியத்தில் 18 ஹார்ட் டிஸ்குகள் காணாமல் போயின. அதில் முக்கிய ஆவணங்கள் எல்லாம் இருந்தன என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருந்தார். ஆனால் 38 ஹார்ட் டிஸ்குகளை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு அமைச்சர் சிடிஆர்.நிர்மல் குமார் அளித்த பதில்: மின்வாரியம் தாமாக முன்வந்து, இதற்கு முந்தைய ஆண்டு கட்டணத்தை விட பல மடங்கு உயர்ந்த சுமார் 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறுமதிப்பீடு செய்ய முடிவு செய்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. இவை புகாராக வந்து, ஆய்வு செய்யவில்லை.
மற்ற மின் நுகர்வோர் விவரங்களை ஆய்வு செய்தபோது, மின் பயன்பாடு மதிப்பீடு செய்பவர்கள், களத்துக்கு செல்லாமல் மேசையிலேயே உட்கார்ந்தபடி, இதற்கு முந்தைய மின் பயன்பாட்டு அளவை அப்படியே கணக்கிட்டு போட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. புதிய ஆட்சி வந்த பிறகு முறையாக கணக்கெடுக்க அறிவுறுத்தப்பட்டது. இதன் மூலம் நான்கு மாத கணக்கெடுப்பு முறையாக செய்யப்பட்டதால் கட்டணம் அதிகமாக வந்துள்ளது. வருங்காலங்களில் ப்ளூடூத் வழியாக கணக்கீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிறைய இடங்களில் மின் தட்டுப்பாடு இருப்பதாகவும் அதற்கான தளவாடங்கள் இல்லை என்றும் செந்தில் பாலாஜி கூறி இருக்கிறார். மின்வாரியத்தின் கடந்த 5 ஆண்டு கால நிலையை ஒரு நிமிடத்தில் சொல்ல முடியாது. இவ்வாறு கூறிய பின்னர் அமைச்சர் நிர்மல்குமார், செந்தில் பாலாஜியை அடைமொழியில் குறிப்பிட்டு, பின்னர் அதை திரும்ப பெறுவதாக தெரிவித்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி எழுந்து, "சங்கி அமைச்சர், மன்னிக்கவும், மின்துறை அமைச்சர் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கி விட்டீர்களா" என பேரவை தலைவரிடம் கேட்டார்.
உடனே அமைச்சர் நிர்மல் குமார், "பாத்ரூமில் 3 மணி நேரம் உட்கார்ந்து இருந்த எதிர்க்கட்சித் தலைவர் என்று நான் சொல்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும்" என்றார். இதனைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்களும், திமுக எம்எல்ஏக்களும் எழுந்து அவையில் கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
பின்னர் நிர்மல்குமார் ஏற்கெனவே செந்தில் பாலாஜி குறித்து குறிப்பிட்ட அடைமொழி வார்த்தையை நீக்கி விட்டதாக பேரவை தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார். தொடர்ந்து உதயநிதி பேசும்போது, "யார் யார் பாத்ரூமில் எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று கண்காணிப்பதற்கு தனி அமைச்சர் வைத்திருக்கிறீர்களா என்று கேட்க விரும்புகிறேன்" என்றார்.
உடனே, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில் அளிக்க எழுந்தபோது, திமுக எம்எல்ஏக்களும் எழுந்து, ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
பின்னர் பேசிய ஆதவ் அர்ஜுனா, "இது மானிய கோரிக்கை மீதான விவாதம் என்பது அனைவருக்கும் தெரியும். இதுபோன்று திமுகவினர் எல்லோரும் எழுந்தால், பின்னர் நாங்களும் எழுந்தால் இந்த அவையே நடக்காது. முதலில் அவர்களை அமரச் சொல்லுங்கள்" என்றார்.
பின்னர் பேசிய உதயநிதி, "எங்கள் முன்னாள் அமைச்சர் மானிய கோரிக்கையில் புள்ளி விவரங்களுடன் தெளிவாக பேசிக் கொண்டிருந்தார். தவறான வார்த்தையை முதலில் யார் கூறியது என்பது உங்களுக்கு தெரியும். அதையெல்லாம் அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டியது உங்கள் பொறுப்பு" என்றார். பின்னர் பேரவைத் தலைவர் அனைவரையும் அமைதியாக அமரவைத்து, விவாதத்தை தொடரச்செய்தார். இந்நிகழ்வில் தவெக, திமுக எம்எல்ஏக்கள் அவையில் எழுப்பிய கோஷத்தால் பரபரப்பு ஏற்பட்டது.