தமிழகம்

‘அமித் ஷாவுக்கு பயப்படுகிறார் பழனிசாமி...’ - உதயநிதி ஸ்டாலின் கிண்டல்

இரா.தினேஷ்குமார்

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக கிளை செயலாளர்கள், பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த பணியை திமுக எதிர்க்கும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆதரிக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக பழனிசாமியால் மூச்சு கூட விட முடியாது. ‘அதிமுக’ என்றால் ‘அண்ணா திராவிட முன்னேற்றம் கழகம்’ என நினைத்து கொள்ளக்கூடாது. இது ‘அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகம்’ என மாறிவிட்டது. ‘அதிமுக’ என்பது ஒரு கட்சி அல்ல.

பாஜகவின் கிளை அமைப்பாகும். அதிமுக தலைமை அலுவலகம், சென்னையில் இருப்பதாக நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால், அதிமுக தலைமை அலுவலகமானது டெல்லியில் உள்ளது. பிரச்சினை என்றால் விமானத்தில் டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்துவிட்டு வருகின்றனர். டெல்லியில் எடுக்கும் முடிவை, தமிழகத்தில் அதிமுக செயல்படுத்துகிறது.

அமித்ஷாவை சந்தித்துவிட்டு, அவரிடம் அனுமதி பெற்றுவிட்டு வேறொரு இயக்கத்தில் செங்கோட்டையன் இணைந்துள்ளார். முன்பெல்லாம் ரகசியமாக சென்று அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்தவர்கள், இப்போது அமித்ஷாவை சந்திக்க போகிறோம் என சொல்லிவிட்டு செல்கின்றனர். இதேபோல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்து விட்டு வந்துள்ளார்.

தமிழகத்துக்கு எதிராக, மத்திய பாஜக அரசு சொல்வதையே அதிமுக செய்கிறது. அமித் ஷாவுக்கு பழனிசாமி பயப்படுகிறார். அவர் அதிமுகவில் இருக்கிறாரா, பாஜகவில் இருக்கிறாரா அல்லது ஆர்எஸ்எஸ்ஸில் இருக்கிறாரா என மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் அண்ணாவும் இல்லை, திராவிடமும் இல்லை, முன்னேற்றமும் இல்லை. இன்னும் சொல்லபோனால் அதிமுகவே இல்லை என்றார்.

திமுக துணை பொதுச் செயலாளர் பொன்முடி எம்எல்ஏ, மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT