உதயநிதி ஸ்டாலின்
சிவகாசி: “மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கூடுதல் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை டிசம்பர் 12-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா - இன்பம் தம்பதியின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்கள் பிர்லா - பேட்ரிசியா பெல் ஜூலியானா ஆகியோரை வாழ்த்தினார்.
இவ்விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசுகையில், “பெண் விடுதலைக்கு விதை போட்டது திராவிட இயக்கம். பெரியார் கொள்கைகளை அண்ணா சட்டமாக்கினார், அதை கருணாநிதி நடைமுறைப்படுத்தினார். பெண்களுக்கு சொத்துரிமை, மகளிர் போலீஸ், உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு, சுயஉதவிக்குழு என பல திட்டங்களை கொண்டு வந்தார்.
அதே வழியில் முதல்வர் ஸ்டாலின், பெண்கள் உரிமைத் தொகை, விடியல் பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். 27 மாதங்களாக 1.15 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. வரும் 12-ம் தேதி முதல் கூடுதல் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை முதல்வர் வழங்க உள்ளார்.
தமிழகம் அனைத்து துறைகளிலும் இந்தியாவில் முதல் மாநிலமாக இருக்க, முதல்வர் கொண்டு வந்துள்ள திட்டங்கள் முக்கிய காரணம். இதை பொறுக்க முடியாத மத்திய பாஜக அரசு, பல்வேறு வகைகளில் நெருக்கடிகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது. நிதி உரிமை பறிக்கப்படுகிறது.
எஸ்.ஐ.ஆர் என்ற பெயரில் வாக்குரிமை பறிக்கவும், மறு சீரமைப்பு என்ற பெயரில் தொகுதிகளில் எண்ணிக்கையை குறைக்க முயற்சிக்கிறார்கள். இதையெல்லாம் கடந்து முதல்வர், தமிழக அரசை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். திராவிட மாடல் அரசு தொடர தமிழக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.