செய்தியாளர்கள் சந்திப்பில் பியூஷ் கோயல்

 
தமிழகம்

“பிரிவினையைத் தூண்டும் உதயநிதியை பதவியிலிருந்து நீக்க வேண்டும்” - பியூஷ் கோயல்

வெற்றி மயிலோன்

சென்னை: “உதயநிதி ஸ்டாலினின் தேசத்துக்கு எதிரான வெறுப்பு பேச்சை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது. எனவே பிரிவினையைத் தூண்டும் உதயநிதி ஸ்டாலினை பதவியிலிருந்து முதல்வர் ஸ்டாலின் நீக்க வேண்டும்” என பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

பிரதமர் மோடி நாளை சென்னை வரவுள்ள நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள பழனிசாமியின் இல்லத்தில் பியூஷ் கோயல் காலை உணவு அருந்தினார்.

          

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல், ‘ ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும். திமுக ஆட்சியில் ஊழலை தவிர வேறு எதுவும் நடக்கவில்லை என அனைத்து தரப்பு மக்களும் புரிந்து கொண்டனர். வளர்ச்சிக்கு எதிரான திமுக அரசு மக்கள் நலனுக்காக எதையும் செய்யவில்லை. திமுகவின் குடும்ப ஆட்சியில் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்

உதயநிதி ஸ்டாலினின் தேசத்துக்கு எதிரான வெறுப்பு பேச்சை உயர் நீதிமன்றம் நேற்று கண்டித்தது. எனவே உதயநிதி ஸ்டாலினை பதவியிலிருந்து முதல்வர் ஸ்டாலின் நீக்க வேண்டும். உதயநிதியின் பேச்சு தமிழகத்தில் பிரிவினையை தூண்டி, சமூகங்களுக்கு இடையே பிளவை உருவாக்கும் வகையில் உள்ளது.

நாளை பிரதமர் தமிழகத்துக்கு வருகை தருகிறார். மேலும், மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் உட்பட தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்போது தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும். தமிழ் கலாச்சாரம், தமிழின் பெருமை ஆகியவற்றை நிலைநிறுத்தி, தமிழகத்தை நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுவோம்” என்றார்

SCROLL FOR NEXT