தமிழகம்

பூந்தமல்லியில் மின்சார பேருந்து பணிமனையை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்!

இரா.நாகராஜன்

பூந்தமல்லி: பூந்தமல்லியில் மாநகர போக்குவரத்துக்கழகத்தின் மின்சார பேருந்து பணிமனையை இன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து, 125 மின்சார பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில், சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் மின்சாரப் பேருந்துகள் இயக்கம் கடந்த ஜூன் 29-ம் தேதி முதல் படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் உள்ள மாநகர் போக்குவரத்துக் கழக பணிமனை, உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் பங்களிப்புடன் சென்னை பெருநகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ், ரூ.43.53 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட மின்சாரப் பேருந்து பணிமனையாக மாற்றப்பட்டுள்ளது.

உரிய கட்டிட உட்கட்டமைப்பு, பேருந்துகளுக்கு மின்னேற்றம் செய்வதற்கு 25 சார்ஜிங் பாயின்ட் அமைப்பு, புதிய மின்மாற்றிகள் பொருத்துதல் மற்றும் தீயணைக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மாற்றப்பட்ட மின்சார பேருந்து பணிமனை திறப்பு விழா மற்றும் ரூ.214.50 கோடி மதிப்பிலான 45 புதிய தாழ்தள மின்சார குளிர்சாதனப் பேருந்துகள் மற்றும் 80 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் என 125 பேருந்துகள் இயக்கம் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது.

இதில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, புதிய பணிமனையை திறந்து வைத்தார். தொடர்ந்து, அவர் பூந்தமல்லி மின்சார பேருந்து பணிமனையில் இருந்து 125 மின்சார பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிறகு, துணை முதல்வர், மின்சார பேருந்தில் ஏறி பயணம் செய்தார்.

இந்நிகழ்வுகளில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT