தமிழகம்

“தாராபுரத்தில் விஜய் கத்துவதற்கு பதிலாக நடிக்க தொடங்கிவிட்டார்” - உதயநிதி

தமிழினி

தாராபுரம்: “மேடை ஏறினாலே காட்டு கத்து கத்தும் முதல்வர் விஜய், தாராபுரத்தில் கத்தாமல் நடிக்கத் தொடங்கிவிட்டார்” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு ஆதரவாக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “தவெக ஆட்சி அமைக்க, கட்சித் தலைவர்களுக்கு சோஃபாவும், எம்எல்ஏக்களுக்கு பெட்டியும் கொடுத்துள்ளார் விஜய். அதனால்தான் சத்தியபாமாவை 'பெட்டிபாமா' என மக்கள் அழைக்கிறார்கள்.

தவெகவில் இணைந்து, மீண்டும் வேறு சின்னத்தில் போட்டியிடுகிறார் என்றால், தாராபுரம் மக்களை ஏமாளிகள், சுயமரியாதை இல்லாதவர்கள் என நினைத்துவிட்டார் போல. தற்போதும் தனக்கு வாக்களிப்பார் என நினைக்கிறார்.

தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யா படித்தவர், வழக்கறிஞர், சட்டமன்றத்தில் உங்களுக்காக வாதாடும் ஆற்றல் படைத்தவர். அவருக்கு வாக்களித்தால் அவர் கட்சி தாவமாட்டார். ஆனால், பெட்டிபாமாவுக்கு வாக்களித்தால் அடுத்து வேறு கட்சிக்குத் தாவிவிடுவார்.

திமுக கூட்டணியில் இருந்த சிலர் சொல்லிவிட்டு சென்றனர். சில துரோகிகள் சொல்லாமல் சென்றனர். அந்த துரோகிகளை கடைசி வரை நாங்கள் மறக்க மாட்டோம். நீங்களும் மறக்க வேண்டாம்.

முதல்வர் விஜய் மதுராந்தகத்தில் காட்டு கத்தல் கத்துகிறார். மேடை ஏறினாலே காட்டு கத்து கத்தும் முதல்வர் விஜயைப் பார்க்கும்போது, ‘இவ்வளவு கத்தாதீங்க… பி.பி. வந்துரும்’ எனச் சொல்லும் அளவுக்கு விஜய்யின் பேச்சு இருக்கும். ஆனால், தாராபுரத்தில் மட்டும் கத்தவில்லை. அதற்குப் பதிலாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். அவருடன் சேர்ந்து வேட்பாளரும் நடிக்கிறார்.

சட்டப்பேரவையில் பாட்டு நிகழ்ச்சிதான் நடக்கிறது. முதல்வர் விஜய்யோ இன்னும் டான்ஸும், சண்டைக் காட்சிகளும் மட்டும்தான் போடவில்லை.

ஆனால், சில நேரங்களில் அவையில் இருப்பது கூடத் தெரியாது. பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி இருப்பார். எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டார். சட்டம் - ஒழுங்கு விவகாரத்தில் கேள்வி எழுப்பினேன். முதல்வர் இதுவரை பதில் அளிக்கவில்லை. கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாத ஓடுகாளி முதல்வர்.

5 மாதத்துக்கு முன்பு வந்து உங்களிடம் ஓட்டு கேட்டேன், வெற்றி பெற வைத்துவிடுவேன் எனச் சொல்லி பெரிய அல்வா கொடுத்தீர்கள் எனக்கு. தவெகவில் உள்ள அமைச்சர்கள் பெயர் முதல்வருக்கே தெரியாது. எல்லா அமைச்சரையும் பட்ட பெயர் வைத்துதான் அழைத்து வருகிறோம்.

சட்டம் - ஒழுங்கு, மின்வெட்டு, அறிவால் வெட்டு என தமிழகம் சீர்கெட்டுள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்தில் 10 நாட்கள்கூட வேலை கொடுப்பதில்லை. அதுமட்டுமல்ல விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவெக அரசுக்கு வக்கில்லை” என்று அவர் பேசினார்.

SCROLL FOR NEXT