வரும் 4 மாதங்களில் திமுகவினர் கவனமாக செயல்பட்டு மக்களின் வாக்குகளை காப்பாற்ற வேண்டும் என்று தனது பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது 49-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு, பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அதில் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: எனது பிறந்தநாளை ஒட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது எஸ்ஐஆர் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் பொதுமக்கள் தங்களின் வாக்குகளை உறுதி செய்துகொள்ள வேண்டும். தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன.
அடுத்து வரும் 4 மாத காலம் மிகவும் முக்கியமானது. கட்சியினர் நமது இலக்கை அடைய கவனமாக செயல்பட வேண்டும். முதல்வர் கூறியது போல நமது இலக்கு ‘வெல்வோம் 200, படைப்போம் வரலாறு’. அதுவே எனது பிறந்தநாள் வேண்டுகோளாகும் என்றார்.
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறும்போது, “தொண்டர்களின் பிறந்தநாள் வாழ்த்துகளை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன். மேலும் எஸ்ஐஆர் பணிகளில் இளைஞர் அணியினர் தீவிரம் காட்ட வேண்டும். கூடுதல் கவனம் செலுத்தி மக்களின் வாக்குகளை காப்பாற்ற வேண்டும். எனது பிறந்தநாளை மனிதநேய நாள் என்று நான் சொல்லவில்லை.
பிறந்த நாள் விழா எந்த ஆடம்பரமும் இல்லாமல் மக்கள் நலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆண்டு முழுவதும் மக்கள் பணியை செய்ய வேண்டும். பருவமழைக்கான முன்னெச்சரிக்கை பணிகளுக்கு நாங்கள் தயாராக உள்ளோம்”என்று தெரிவித்தார்.