தமிழகம்

உதயநிதியின் ‘சனாதன பேச்சு’ 80% இந்துக்களுக்கு எதிரானது: உயர் நீதிமன்ற நீதிபதி கூறியது என்ன?

டெல்லி பாஜக நிர்வாகி மீதான வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

கி.மகாராஜன்

மதுரை: "தமிழக துணை முதல்வர் உதயநிதியின் சனாதனம் குறித்த வெறுப்புப் பேச்சு என்பது இந்தியாவில் வாழும் 80 சதவீத இந்துக்களுக்கு எதிரானது. பெரியார் தவிர மகாத்மா காந்தி, காமராஜர், புத்தர், ராமானுஜர், வள்ளலார் போன்றவர்கள் சனாதானத்துக்கு எதிரானவர்கள் அல்ல" என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கூறியுள்ளது.

தமிழக துணை முதல்வர் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சு தொடர்பாக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக டெல்லியை சேர்ந்த பாஜக ஐடி பிரிவு தேசிய தலைவர் அமித் மாளவியா மீது திருச்சி சிசிபி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அமித் மாளவியா மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்து நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு ‘ஒழிப்பு’ என்ற வார்த்தையை அடிப்படையாகக் கொண்டது. ‘ஒழிப்பு’ என்ற வார்த்தையை ‘இல்லாமல் ஆக்குதல்’ என மொழிபெயர்க்கலாம். இது 'ஏற்கெனவே இருக்கும் ஒன்று இருக்கக் கூடாது' என்பதைக் குறிக்கிறது. இதை இந்த வழக்குக்குப் பயன்படுத்தினால், சனாதன தர்மம் இருக்கக் கூடாது என்றால், சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களும் இருக்கக் கூடாது. இதன் பொருள், அழிப்பவரின் கருத்துக்கு இணங்காத செயல்பாடுகளை ஒடுக்குவதாகும்.

          

அப்படிப் பார்த்தால், சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஒரு மக்கள் குழுவே இருக்கக் கூடாது என்றால், அதற்குப் பொருத்தமான சொல் 'இனப்படுகொலை' ஆகும். சனாதன தர்மம் ஒரு மதம் என்றால், அது 'மதப் படுகொலை' ஆகும். பல்வேறு தாக்குதல்கள் மூலமாகவும், எந்தவொரு முறையையும் அல்லது பல முறைகளையும் பின்பற்றி மக்களை வேரறுப்பதையும் குறிக்கிறது. எனவே, 'சனாதன ஒழிப்பு' என்ற தமிழ்ச் சொற்றொடர் தெளிவாக இனப்படுகொலை அல்லது கலாச்சாரப் படுகொலையை குறிக்கும்.

இத்தகைய சூழ்நிலையில், அமைச்சரின் பேச்சைக் கேள்விக்குள்ளாக்கி மனுதாரர் சமூக வலைதளத்தில் பதிவிட்டது வெறுப்பு பேச்சாகாது. மனுதாரரின் செயல், அமைச்சரின் வெறுப்புப் பேச்சுக்கு ஓர் எதிர்வினை மட்டுமே. இதனால் வழக்கை ரத்து செய்ய கோருவதற்கு மனுதாரருக்கு முழு உரிமை உள்ளது.

தமிழகத்தில் ​இந்து மதத்தினர் மற்றும் சாதி இந்துக்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. உதாரணமாக ​​குடுமியை வெட்டுவது, பூணூலைக் கழற்றுவது, பன்றிகளுக்குப் பூணூல் அணிவிப்பது போன்ற இந்து மதத்துக்கும், சாதி இந்துக்களுக்கும் எதிரான குறிப்பிட்ட தாக்குதல் சம்பவங்கள் நடந்திருப்பதை நிரூபிக்க ஆவணங்கள் உள்ளன.

இந்து கடவுள்களான ராமர், விநாயகருக்கு பெரியார் செருப்பு மாலை அணிவித்துள்ளார். பல விநாயகர் சிலைகளை உடைத்துள்ளார். இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டன. ஆனால், ஒரு சில புகார் தவிர்த்து பெரும்பாலான புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது தொடர்பாக பெரியாருக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, எதிர்காலத்தில் புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

கடந்த 100 ஆண்டுகளாக, திராவிடர் கழகத்தாலும், அதைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி சார்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தாலும் இந்து மதத்தின் மீது ஒரு தெளிவான தாக்குதல் நடத்தப்படுகிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ​அமைச்சரின் பேச்சு 80 சதவீத இந்துக்களுக்கு முற்றிலும் எதிராக உள்ளதையும், அது வெறுப்புப் பேச்சு என்பதும் தெரிகிறது.

சனாதனியான மனுதாரர், அத்தகைய வெறுப்புப் பேச்சால் பாதிக்கப்பட்டவர் மற்றும் சனாதன தர்மத்தை அந்த வெறுப்புப் பேச்சிலிருந்து பாதுகாத்துள்ளார். இதனால் அமைச்சர் பேச்சுக்கு பதிலளித்த மனுதாரர் மீது சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியாது. இப்பிரிவுகள் அமைச்சரின் பேச்சுக்குதான் பொருந்தும்.

வெறுப்புப் பேச்சைத் தொடங்குபவர்கள் எந்தத் தண்டனையுமின்றி விடுவிக்கப்படுகின்றனர். அதற்கு எதிர்வினையாற்றுபவர்கள் சட்டத்தின் கோபத்துக்கு ஆளாகின்றனர் என்கிற தற்போதைய நிலையை நீதிமன்றம் வேதனையுடன் பதிவு செய்கிறது.

நீதிமன்றங்களும் எதிர்வினையாற்றியவர்களையே கேள்வி கேட்கின்றனவே தவிர, வெறுப்புப் பேச்சைத் தொடங்கிய நபருக்கு எதிராகச் சட்டத்தை பயன்படுத்துவதில்லை. இந்த வழக்கில் அமைச்சர் மீது அவரது வெறுப்புப் பேச்சுக்காக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. மற்ற மாநிலங்களில் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் சில ஆளுமைகளைக் குறிப்பிட்டு, அவர்கள் சனாதன தர்மத்துக்கு எதிராகப் பேசியுள்ளதாகக் கூறியுள்ளனர். அந்தப் பட்டியலில் முதலில் இருப்பவர் மகாத்மா காந்தி. அவர் தனது சுயசரிதையில் தன்னை ஒரு சனாதன இந்து என்று அறிவித்துக்கொண்டு, தான் பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதம், மனுஸ்மிருதி ஆகியவற்றைப் படித்ததாகவும், தனது முக்கிய குணம் அகிம்சை என்றும் கூறியுள்ளார். மகாத்மா காந்தி சனாதன தர்மத்துக்கு எதிரானவர் அல்ல.

அடுத்து பட்டியலில் இருப்பவர் காமராஜர். அவர் ஒரு தீவிர இந்து பக்தர். அவர் அடிக்கடி முருகன் பக்திப் பாடல்களைப் பாடுவார். மதத்துடனான அவரது தொடர்பு தனிப்பட்ட மற்றும் சொந்தமானது. எனவே, காமராஜர் சனாதன தர்மத்துக்கு எதிரானவர் அல்ல.

அடுத்து புத்தர். அவர் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தவர். அவர் சில வேதகால நடைமுறைகளை விமர்சித்தார். சிலை வழிபாடு இல்லாத ஆன்ம விடுதலைப் பாதையை ஊக்குவித்தார். இதுவே ஆன்மிகப் பாதையின் மிக உயர்ந்த வடிவமாகும். புத்தர் விபாசனா தியானத்தைப் பரப்பினார். இது சைவ சமயத்தின் கீழ் வரும் ஒரு தியான முறையாகும். எனவே, புத்தர் சனாதன தர்மத்துக்கு எதிரானவர் அல்ல.

அடுத்து ராமானுஜர். அவர் விசிஷ்டாத்வைத தத்துவத்தின் ஆதரவாளர். மேலும், "ஓம் நமோ நாராயணாய" என்ற இந்து மந்திரத்தை அனைவரும் பயனடையும் வகையில் வெளிப்படையாக உச்சரித்தார். இதன் மூலம், அனைவரும் முக்தி அடைய அவர் வழிவகுத்தார். அவர் சனாதன தர்மத்தின் ஒரு தூணாகத் திகழ்கிறார். ஆகவே, ராமானுஜர் சனாதன தர்மத்துக்கு எதிரானவர் அல்ல.

அடுத்து வள்ளலார். அவர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர். மேலும், விலங்குகள் உட்பட அனைத்து உயிரினங்களிடமும் கருணை காட்டுவதற்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். விலங்குகளை வதைப்பதை எதிர்த்தார். "அருட்பெருஞ்ஜோதி" (எரியும் விளக்கு) மூலம் ஆன்ம விடுதலைக்கு முக்கியத்துவம் அளித்தார். எனவே, வள்ளலார் சனாதன தர்மத்துக்கு எதிரானவர் அல்ல.

இவர்கள் சனாதன தர்மத்தின் ஏதேனும் ஒரு வடிவத்தைப் பின்பற்றினர் மற்றும் அதையே பரிந்துரைத்தனர். தேவையற்ற விஷயங்களை விட்டுவிட்டு, முக்தி அடைய சனாதன தர்மத்தைப் பின்பற்றுமாறு கூறினர்.

தேவையற்ற விஷயங்களைக் கைவிடுமாறு அல்லது நீக்குமாறு அவர்கள் பரிந்துரைத்ததால், அவர்கள் சனாதன தர்மத்துக்கு எதிரானவர்கள் என்ற எண்ணத்தில் உள்ளனர், இது ஒரு தெளிவான தவறான தகவல் ஆகும்.

ஈ.வெ.ராமசாமி என்ற பெரியார் தவிர வேறு யாரும் சனாதன தர்மத்துக்கு எதிராகப் பேசவில்லை. எனவே அரசு தரப்பு தாக்கல் செய்த பதில் மனுவில் தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், ஆளுநரும் பாஜகவும் சனாதனம் பற்றிப் பேசும்போது, ​​அமைச்சர் ஏன் சனாதனம் பற்றிப் பேசக் கூடாது? எனக் கூறப்பட்டுள்ளது. இது அரசியல் சாயம் பூசப்பட்டதை தெளிவாகக் காட்டுகிறது. இதை விசாரணை அதிகாரி பதில் மனுவாக தாக்கல் செய்திருப்பது துரதிர்ஷடவசமானது.

அதிகாரிகள் அரசியல் சார்பற்றவர்களாக இருக்க வேண்டும், அரசியல் கட்சிக்குச் சார்பாகச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இந்த காரணங்களாலும், சூழ்நிலைகளின் அடிப்படையிலும் மனுதாரர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT