தமிழகம்

“விசாரணைக்கு திமுக தயார்” - பெரியார் அறிவுலக முறைகேடு விவகாரத்தில் உதயநிதி உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: “கோவை பெரியார் அறிவுலகம் நூலக புத்தகக் கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் விசாரணைக்கு திமுக தயார்” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறும்போது, “தவெக அரசிடம் எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை. எதற்கெடுத்தாலும் திமுகதான் காரணம் எனக் கூறுகின்றனர். இந்த விவகாரம் குறித்த விசாரணைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

நான் நிச்சயமாக சொல்கிறேன். இது திமுக ஆட்சி காலத்தில் நடந்திருக்காது. புத்தகங்களின் பெயர் மற்றும் எழுத்தாளர்களின் பெயர்களைப் பார்த்திருப்பீர்கள். அதைப் பார்த்தாலே எந்த ஆட்சியில் ஊழல் நடந்துள்ளது என்பது தெரிந்துவிடும்” என்றார்.

கோவையில் அண்மையில் திறந்துவைக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்துக்கு போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டு, அதன்மூலம் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றிருப்பதாக பெரியார் அறிவுலகத்துக்கு நூல்களை பரிந்துரை செய்வதற்கும், அதனைத் தேர்வு செய்து வாங்குவதற்கும் அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தவறான தகவல்களுடன் அந்த புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதனிடையே, போலி புத்தகங்கள் திமுக ஆட்சியில் வாங்கப்பட்டதாக தவெக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

திமுக தரப்பில், முந்தைய ஆட்சி மீது குற்றம் சுமத்துவதற்கு முன், தற்போதைய அரசு தனது நிர்வாகக் காலத்தில் நடந்த ஒவ்வொரு நடவடிக்கைக்கும் கணக்குக் காட்ட வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், புத்தகக் கொள்முதல் விவகாரத்தில் விசாரணைக்கு திமுக தயார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, திமுக சட்டத்துறை செயலாளர் பரந்தாமன் கூறும்போது, “பெரியார் அறிவுலகம் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்று நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதை முதல்வர் விஜய் திறந்து வைத்தது பெரிய செய்தி ஆகவில்லை, மக்கள் மத்தியில் பேசப்படவில்லை.

ஆனால், மு.க.ஸ்டாலின் சென்று பார்த்தபிறகு, அதற்கு கிடைத்த வரவேற்பு, செய்திக்கு கிடைத்த முக்கியத்துவம் ஆகியவற்றை பொறுத்துக் கொள்ள முடியாமல், ஒரு ‘ஃபேக் நரேட்டிவை’ செட் பண்ணி இருக்கிறது தவெக அரசு.

எந்த ஒரு பைத்தியக்காரனும் ‘திரிஷா விஜய்’ன்னு ஒருவர் எழுதிய புத்தகத்தை வாங்க மாட்டான், அதுவும் திமுக வாங்காது. இந்த விவகாரம் தொடர்பாக துறைரீதியான விசாரணைக்கு அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவிடாதது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேவேளையில், “பெரியார் அறிவுலகம் நூலகத்துக்கான புத்தகக் கொள்முதலில் இந்தியாவிலேயே முதல் முறையாக ஏஐ மூலம் திமுக ஊழல் செய்துள்ளது. பெரியார் பெயரில் இவ்வளவு பெரிய அநியாயம் செய்துவிட்டு, எங்கள் மீது திமுக அவதூறு பரப்புகிறது. தவெக ஆட்சியில் ஒரு புத்தகம் கூட வாங்கவில்லை” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.

திமுக புகார் மனு:

இதனிடையே, கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தில் புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க,  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநருக்கு திமுக சார்பில், அக்கட்சியின் சட்டத் துறை இணைச் செயலாளர் ஐ.பரந்தாமன் புகார் மனு அனுப்பியுள்ளார்.

அந்த மனுவின் விவரம்: கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க திமுக சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்வரும் கேள்விகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

1. இந்த புத்தகங்களுக்கான கொள்முதல் / வாங்குதல் ஆர்டர்களை (procurement / purchase orders) வழங்கிய அதிகாரிகள் யார்?

2. புத்தகங்கள் ஒவ்வொன்றாக மதிப்பீடு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு வாங்கப்பட்டதா அல்லது மொத்தமாக (in bulk batches) வாங்கப்பட்டதா?

3. இந்த பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆர்டர்கள் எந்த தேதிகளில் வழங்கப்பட்டன?

4. கொள்முதலுக்கான குறிப்பு கோப்பை (note file) தொடங்கிய, கையெழுத்திட்ட மற்றும் ஒப்புதல் அளித்த அதிகாரிகள் யார்?

5. இந்த கொள்முதலுக்கு தகுதிவாய்ந்த புத்தகத் தேர்வு / கொள்முதல் குழு (Book Selection / Purchase Committee) ஒப்புதல் அளித்ததா, மேலும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறை பின்பற்றப்பட்டதா?

6. திரிஷா விஜய், சங்கீதா விஜய், தாமரை பன்னீர், தாமரை முரளி, மோனிகா ரவி ஆர். மற்றும் பிற பெயர்களைக் கொண்ட எழுத்தாளர்கள் உண்மையில் இருக்கிறார்களா?

7. புத்தகங்கள் எந்த தேதிகளில் விநியோகிக்கப்பட்டன, அவை பெறப்பட்டவுடன் அவற்றின் தரம் மற்றும் அளவு சரிபார்க்கப்பட்டதா?

8. ஒவ்வொரு பதிப்பகத்துக்கும் எந்த தேதிகளில், எவ்வளவு தொகை வழங்கப்பட்டது? இவ்வாறு அந்த புகார் மனுவில் கோரப்பட்டிருந்தது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT