உதயநிதி ஸ்டாலின்
சென்னை: ‘2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சி, உங்களைப் போல எதிர்த்தரப்பு எம்எல்ஏ-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, ஷோஃபா செட் அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி இல்லை’ என முதல்வர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் தமிழக முதல்வர் விஜய், நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க தினமும் வருகைப்பதிவு போட்டுக்கொண்டு இருக்க வில்லை. நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம் என்று சொல்கிறீர்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராகவே ஆகியுள்ளீர்கள். அதை மறந்துட்டீங்களா சிஎம் சார்?.
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சியை பத்தி, போஸ்ட் பண்ணியிருக்கீங்களே, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு எம்எல்ஏ-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, ஷோஃபா செட் அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்லை.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்து விட்டார்கள் போல. திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களுடைய வெற்றி’ என்று தெரிவித்தார்.