வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் புழல் மகாலட்சுமி நகரில் ரூ.12.39 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சென்னை நடுநிலைப் பள்ளி கட்டிடத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, மேயர் ஆர்.பிரியா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை: வடசென்னை வளர்ச்சிக் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில், ரூ.53 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சென்னை நடுநிலைப் பள்ளிக்கட்டிடம், பேருந்து நிலையம், விளையாட்டு வளாகம் ஆகியவற்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட புழல் மகாலஷ்மி நகரில் அமைந்துள்ள மாதவரம் ஊராட்சி ஒன்றிய பள்ளி, கடந்த 1967-ம் ஆண்டு அண்ணா முதல்வராக இருந்தபோது திறக்கப்பட்டது.
இந்நிலையில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சிஎம்டிஏ சார்பில், ரூ.12.39 கோடி செலவில் 37,342 சதுரஅடி கட்டிடப் பரப்பளவில் தரை தளம் மற்றும் மூன்று தளங்களுடன் சென்னை நடுநிலைப் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இதில், 27 வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை, ஆசிரியர்கள் அறை, பதிவு அறை, 2 ஆய்வகங்கள், உடற்கல்வி கூடம், நூலகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, சேமிப்பு அறை, ஆண்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில், சிஎம்டிஏ சார்பில் ரூ.21.95 கோடியில் தரைதளம் மற்றும் 2 தளங்களுடன் தண்டையார்ப்பேட்டை பேருந்து நிலையம், 37,157 சதுர அடி கட்டிடப் பரப்பளவில் தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் ஆர்.கே.நகர் விளையாட்டு வளாகம் கட்டப்பட்டுள்ளது.
இவற்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அதேபோல், ராயபுரம் மண்டலம், வார்டு-52, கல்லறை சாலையில் ரூ.10.32 கோடியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் திருமண மாளிகை, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-73, புளியந்தோப்பு, திருவேங்கடசாமி தெரு சென்னை தொடக்கப் பள்ளியில் ரூ.5.01 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தையும் திறந்தார்.
மேலும், தண்டையார்பேட்டை மாநகர் போக்குவரத்துக் கழக பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.33.82 கோடி மதிப்பில், மேம்படுத்தப்பட்ட தண்டையார்பேட்டை-1 மின்சாரப் பேருந்து பணிமனையைத் திறந்துவைத்து, ரூ.170 கோடி மதிப்பிலான 100 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 750 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படுவதற்காக ரூ.289 கோடி மதிப்பீட்டில் மின்னேற்ற வசதிகளுடன் மின்சாரப் பணிமனைகளாக மேம்படுத்துதல் மற்றும் புதிய பணிமனைகள் அமைக்கும்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சா.சி.சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, கலாநிதி வீராசாமி எம்.பி., மாதவரம் எஸ்.சுதர்சனம் உள்ளிட்ட எம்எல்ஏ.க்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.