சென்னை: தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது 50-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு இன்று காலை தனது பெற்றொரிடம் நேரில் சென்று ஆசி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து சென்னை மெரீனாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது திமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் பலரும் அவருடன் இருந்தனர். முன்னதாக இன்று காலை முதலே திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் பலரும் உதயநிதிக்கு நேரில் வாழ்த்து தெரிவிப்பதற்காக அவரின் வீட்டின் முன் திரண்டனர்.
முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “கொள்கைப் பாதையில் உழைப்பை அடையாளமாக்கி, மக்கள் பணியுடன் இலட்சியப் பயணத்தில் சிறந்திடத் தம்பி உதயநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
சிந்தனைகளால் வளம் பெற்ற தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் காட்சிப் பிழைகளால் தடம் மாறிடாமல் காக்க வேண்டிய பெரும் பொறுப்பைக் காலம் நம்மிடம் வழங்கியுள்ளது. கழத்தின் ரத்த நாளமாக நான் வளர்த்த இளைஞரணியின் கொள்கைப் பணியில் இனித் தேவை வேகமல்ல, பெரும் பாய்ச்சல்.
உனது பணியே உன்னை தீர்மானிக்கட்டும். உழைப்பால் உயர்ந்திடு! இலட்சியப் பாதையில் முன்னேறு! கொள்கையின் வெற்றியில் உன் வாழ்வின் வெற்றியைக் கண்டிடு” என்று வாழ்த்தியிருந்தார்.