உதயநிதி ஸ்டாலின்

 
தமிழகம்

“பெண் ஆட்சியர் புகார் மறைக்கப்பட்டதா?” - முதல்வர் விளக்கமளிக்க உதயநிதி கோரிக்கை

தமிழினி

சென்னை: “பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் தலைமைச் செயலாளரிடம் தொலைபேசியில் புகார் அளித்தது முதல்வருக்குத் தெரியாதா, புகார் மறைக்கப்பட்டதா அல்லது எம்எல்ஏ-வையும் ஆட்சியையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லையா என்பதை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்” என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “ஆளுங்கட்சியின் பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்க தான் ஆட்சி நடத்துகிறாரா டம்மி முதல்வர்? கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பவில்லை என்று பச்சைப்பொய் சொல்லிவந்த இந்த கையாலாகா ஆட்சியாளர்களின் முகத்தில் கரி பூசி இருக்கிறது இன்றைய ‘தி இந்து’ நாளிதழ் செய்தி.

இந்தச் சம்பவத்தில் ஒரு மாதம் முன்பே தலைமைச் செயலாளரிடம் தொலைபேசி வாயிலாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதுமட்டுமின்றி, ஆட்சியரிடம் இருந்து எந்தப் புகாரும் வரவில்லை என்று உயர் நீதிமன்றத்திலேயே இந்த அரசு நேற்று பொய் சொல்லியிருக்கிறது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர், தலைமைச் செயலாளரிடம் தொலைபேசியில் புகார் அளித்துள்ளார் என்பது முதல்வருக்கு தெரியாதா? அதை முதல்வரிடம் தலைமைச் செயலாளர் மறைத்தாரா? அல்லது அது தெரிந்தும் எம்எல்ஏ- வையும் தனது அரசையும் காப்பாற்றுவதற்காக முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லையா? இதில் எது உண்மை என்பதை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்.

ஒருவேளை அந்தச் செய்தி மறைக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு துணையாக நிற்காமல், குற்றத்தை மறைத்து, குற்றவாளியைப் பாதுகாக்க துணைபோன தலைமைச் செயலாளர், பொதுத் துறை செயலாளர், முதல்வர் அலுவலக ஐஏஎஸ் அதிகாரிகளையும், முதல்வர் உடனே விடுப்பில் அனுப்ப வேண்டும்.

அப்போது தான், இந்தப் புகாரின் மீது நியாயமான முறையில் விசாரணை நடைபெறும். இந்த சம்பவத்தில் இனியும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட எம்எல்ஏ-வை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT