| படம்: ம.பிரபு |
சென்னை: ‘சட்டப்பேரவையை ‘ஷூட்டிங் ஸ்பாட்’ ஆக முதல்வர் விஜய் மாற்றியிருக்கிறார், பேரவைத் தலைவர் இயக்குநராகவும், அமைச்சர்கள் உதவி இயக்குநர் களாகவும் செயல்படுகிறார்கள்’ என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்தபின், தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: சினிமா பாணியில், தயார் செய்து வைக்கப்பட்டிருந்த, வசனத்தைத்தான் முதல்வர் பதிலுரையில் பேசியிருக்கிறார்.
அப்போது, சில உண்மைக்கு மாறான தகவல்களை அவையில் பதிவு செய்தார். அதனால் நாங்கள் குறுக்கிட்டோம். கொண்டு வந்திருந்த ஸ்கிரிப்ட்டை பேசி முடிக்கும் வரை எதற்கும் பதில் சொல்லமாட்டேன் என்ற தொனியில்தான் முதல்வர் பேசினார்.
பத்திரிக்கையாளர்களுக்கும் அவர் பதில் சொல்வதில்லை. சட்டப்பேரவையில் எங்களுக்கும் அவர் பதில் சொல்வதில்லை. திமுக மீது பழி போடுவதையே இந்த அரசு பழக்கமாகக் கொண்டிருக்கிறது. கருணாநிதி படத்திறப்பு விழாவில் இருமுறை தேசிய கீதம் பாடப்பட்டதாக முதல்வர் கூறுகிறார்.
குடியரசு தலைவருக்கு தனி புரோட்டகால் உள்ளது என்பதும், ஆளுநருக்கு கிடையாது என்பதும்கூட முதல்வருக்கு தெரியாதது வருத்தம் அளிக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ‘நான் முதல்வன்’ திட்டம், மின்வெட்டு பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை என எந்தவித கேள்விக்கும் தெளிவான பதிலை அவர் அளிக்கவில்லை.
சட்டம் ஒழுங்கு பிரச்சினையை பற்றி கேட்டதற்கு கடந்த ஆட்சியில் டிஜிபி-யை நியமிக்கவில்லை என்கிறார். சரி, நாங்கள்தான் நியமிக்கவில்லை. நீங்கள் மாற்றம் என சொல்லி தானே ஆட்சிக்கு வந்தீர்கள். ஒரே நாளில் எல்லாவற்றையும் கிழித்து எறிந்துவிடுவோம் என்றீர்களே, இப்போது, இந்த 40 நாட்களில் உங்கள் காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? சட்டப்பேரவையை சினிமா தியேட்டர்போல மாற்றிவிட்டார்கள். விசில் அடிக்கிறார்கள்.
இனி அமைச்சர்கள் பலர் கவர்ச்சி பாடலுக்கும் டான்ஸ் ஆடவும் ஆரம்பித்துவிடுவார்கள். முதல்வர் செயற்கைத்தனமாக பேசுகிறார். இங்கேயும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். சட்டப்பேரவை தலைவர் இனி, ‘ஆக் ஷன், கட், ஒன்ஸ்மோர்’ என சொல்லவும் ஆரம்பித்துவிடுவார்.
அதேபோல், தலைமை செயலகத்துக்குள், கேரவன், மேக்கப்மேன், சண்டை பயிற்சியாளர்கள் என அனைவரும் வந்துவிடுவார்கள். சட்டப்பேரவையை கிட்டத்தட்ட, ‘ஷூட்டிங் ஸ்பாட்’ ஆக மாற்றி வருகிறார். இயக்குநராக சட்டப்பேரவை தலைவரும், உதவி இயக்குநர்களாக அமைச்சர்களும் செயல்படுகின்றனர்.
நாங்கள் ஊழல் செய்திருக்கிறோம் என்கிறார்களே, ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தை நாடுங்கள். அதை சந்திக்க தயாராக நாங்கள் இருக்கிறோம். அதைவிட்டு, பொத்தாம் பொதுவாக பொதுக்கூட்டத்தில், பிரச்சார கூட்டங்களில் பேசுவதைப்போல, சட்டப்பேரவையில் பேசக்கூடாது.
தேர்தல் வாக்குறுதி எதைப்பற்றியும் முதல்வர் வாய் திறக்கவில்லை. இந்த ஆட்சி ஒருகேலிக்கூத்து ஆட்சியாகத்தான் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார் குட்டிக்கதைக்கு பதிலடி உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், “சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் ‘ஸ்கிரிப்ட்’ டடாக அவதூறுகளை அள்ளி வீசி நடிப்புத் திறனை காட்டி இருக்கிறார் முதல்வர்.
பேரவையின் ‘லைவ் கேமரா’-வை, சினிமா கேமரா என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி ‘சிங்கிள் டேக்’-ல் ஷூட் செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளைக் கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல், அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் ‘கணவனை தேடும் மனைவி கதை’ எல்லாம் தமிழகத்துக்கே தெரியும். ஆகவே, நடிகர் என்பதை மறந்து, இனியாவது தமிழக முதல்வராக அவர் நடந்து கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.