சென்னை: சட்டப்பேரவையில சனாதனம் குறித்து பேசியது சர்ச்சையான நிலையில் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசும்போது, “மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டேன். இதற்காக என்னை சிலர் விமர்சனம் செய்கிறார்கள்.
இதற்கெல்லாம் பயப்படும் ஆள் நான் இல்லை. எதிர்ப்பிலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புகிறேன். சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொன்னால் யாரும் கோயிலுக்கு போகக் கூடாது என அர்த்தம் இல்லை.
கோயிலில் மட்டுமல்ல, சமூகத்திலும் அனைவருக்கும் சமஉரிமை இருக்க வேண்டும் என்று அர்த்தம். மேல் சாதி - கீழ் சாதி என மக்களைப் பிரிப்பதைத் தான் நான் ஒழிக்க வேண்டும் என சொன்னேன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசிய கொள்கையைத் தான் நானும் பேசினேன். நாங்கள் யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் இல்லை. ஆனால், சமத்துவமின்மையையும், ஒடுக்குமுறையையும் கடுமையாக எதிர்ப்போம் .
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று வள்ளுவர் சொன்னது தான் எங்கள் வழி” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்துப் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனது உரையின் இறுதியில், ”மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்” எனக் கூறி முடித்தார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்தக் கருத்துக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.