செங்கல்பட்டில் பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின்.
செங்கல்பட்டு: தமிழகத்தை புறக்கணிக்கும் பாஜகவை நாம் புறக்கணிக்க வேண்டும் என, உதயநிதி ஸ்டாலின் செங்கல்பட்டில் பிரச்சாரம் செய்த போது கூறினார். செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதியின் திமுக வேட்பாளர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணியை ஆதரித்து, திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: இந்த தேர்தலில் 75 தொகுதிகளில் பிரசாரத்தை முடித்துவிட்டு செங்கல்பட்டு தொகுதிக்கு வந்துள்ளேன். இங்கு வந்து பார்த்த பின்னர் தான் தெரிகின்றது, நீங்கள் கார்த்திக்கின் வெற்றியை உறுதி செய்து வைத்துள்ளீர்கள்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 26,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். இந்த முறை 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவ - மாணவியருக்கு வழங்கப்பட்ட லேப்டாப் திட்டம், 2019-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
முதல்வர் அதனை கருத்தில் கொண்டு கல்லூரி மாணவர்கள் பயனடையும் வகையில் 10 லட்சம் லேப்டாப்புகளை வழங்க உத்தரவிட்டார். மகளிர் உரிமைத் தொகையை தேர்தலை காரணம் காட்டி நீதிமன்றம் சென்று நிறுத்த பார்த்தனர்.
ஆனால், முதல்வர் ரூ.5 ஆயிரம் வழங்கினார். திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைந்தால் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். கடந்த 5 ஆண்டுகளில் பாஜக எந்த உதவியும் செய்ய வில்லை. பட்ஜெட்டில் கூட தமிழ்நாடு என்ற பெயர் இல்லை.
தமிழகத்தை புறக்கணிக்கும் பாஜகவை நாம் புறக்கணிக்க வேண்டும். அதிமுக என்ற போர்வையில் பாஜக நுழைய பார்கிறது. இந்த தேர்தல் டெல்லி அணி, தமிழ் நாடு அணி என முதல்வர் கூறி உள்ளார். இதை கூறினால் மோடியின் முரட்டு அடிமை பழனிசாமிக்கு கோபம் வருகின்றது.
மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்காமல் மோடியின் காலில், பழனிசாமி விழுந்து கிடக்கிறார். எனக்கு அனுபவம் இல்லை என கூறுகிறார் பழனிச்சாமி. எனக்கு இதுபோன்று காலில் விழும் அனுபவம் இல்லை.
சசிகலா காலில் விழுந்து பதவி பெற்ற பின், நீங்களா முதல்வர் பதவி கொடுத்தீர்கள் என கேட்கிறார். எங்கள் இருவருக்கும் பிரச்சினை சென்று கொண்டிருந்தது. தற்போது சசிகலா உள்ளே வந்து உதயநிதி ஸ்டாலின் பேசியது சரி என கூறி உள்ளார்.
பாஜகவுக்கு அடிமையாக உள்ள பத்து தோல்வி பழனிச்சாமிக்கு அடுத்த தோல்வியை கொடுத்து அனைத்து தோல்வி பழனிச்சாமி ஆக்குவோம். பழனிச்சாமி இரு விரல்களை காட்டுவது சின்னம் அல்ல.11-வது தோல்வியை குறிக்கிறது.
உதய சூரியன் சின்னத்தில் வாக்கு செலுத்தி கார்த்திக் தண்டபாணியை வெற்றி அடைய செய்வோம்.செங்கல்பட்டு தொகுதியை வளர்ச்சி அடைய செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.