தாராபுரம் தொகுதிக்குட்பட்ட நத்தப்பாளையத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.
தாராபுரம்: கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வரும் ஆளுங்கட்சிக்கும், கட்சிமாறி துரோகம் இழைத்தவர்களுக்கும் வரவிருக்கும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று தாராபுரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டப்பேரவை தொகுதியின் திமுக வேட்பாளராக சுகன்யா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கட்சியின் இளைஞரணி செயலாரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், நேற்று நத்தம்பாளையம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் மக்கள் பிரச்சினையை பேசுவதில்லை. திமுக எம்எல்ஏக்கள் மக்கள் சந்திக்கும் குடிநீர் தட்டுப்பாடு, சாலை வசதி, சாக்கடை பிரச்சினை மற்றும் கட்டமைப்பு தேவைகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
ஆனால், ஆளுங்கட்சி தரப்பிலோ அல்லது முதலமைச்சரோ மக்கள் பிரச்சினைகளுக்குப் பதில் அளிப்பதில்லை. சட்டப்பேரவை மக்கள் பிரச்சினைகளை விவாதிக்கும் களமாக இல்லாமல், முதலமைச்சரைப் புகழ்ந்து பாடும் இடமாகவும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி போல பாட்டு பாடும் மேடையாகவும் மாறியுள்ளது.
ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே நிறைவேற்றுவோம் என்று கூறி அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மகளிருக்கு ரூ.2,500 உரிமைத் தொகை தருவதாகக் கூறி ஏமாற்றிவிட்டனர். ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர் இலவசம் என்று கூறிவிட்டு, தற்போது அடுத்த ஆண்டுதான் 3 சிலிண்டர்கள் தருவோம் என்கின்றனர்.
இளைஞர்களுக்கான மாதாந்திர ஊக்கத்தொகை ரூ.4,500 மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. தேர்தலில் வெற்றிபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பெட்டி கொடுத்து விலைக்கு வாங்கி, கட்சி மாறச் செய்து ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கியுள்ளனர்.
இதுமட்டுமின்றி, மாநிலம் முழுவதும் மின்வெட்டு நிலவுகிறது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலேயே மின்சாரம் இல்லாத அவலநிலை தான் நீடிக்கிறது. கடந்த தேர்தலில் செய்த தவறை தாராபுரம் தொகுதி மக்கள் மீண்டும் செய்துவிடக் கூடாது. கட்சி மாறிய துரோகிகளுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கக் கூடாது. இவ்வாறு உதயநிதி பேசினார்.
இக்கூட்டத்தில் திரளான கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர். தொடர்ந்து மூலனூர், கொளத்துப்பாளையம், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளிலும் நடந்த பிரச்சாரக் கூட்டங்களில் உதயநிதி வாக்கு சேகரித்து திறந்த வேனில் இருந்தபடி பேசினார்.