மதுராந்தகம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பரந்தாமனை ஆதரித்து திறந்த வேனில் இருந்தபடி நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி.
மதுராந்தகம்/ தாராபுரம்: வாக்கு கேட்டு வரும் தவெக வேட்பாளர்களை மக்கள் விரட்டியடிக்கத் தொடங்கிவிட்டதாக திமுக இளைஞரணித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி விமர்சனம் செய்துள்ளார்.
மதுராந்தகம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து உதயநிதி மேலும் பேசியதாவது: கடந்த ஆண்டு இதே நாளில்தான் கரூரில் பிரச்சாரம் செய்யப் போகிறேன் என்று 10 மணி நேரம் தாமதமாகச் சென்று, அங்கிருந்த மக்களுக்கு தண்ணீர் வசதி கூட ஏற்படுத்தாமல் இடநெருக்கடி ஏற்பட்டு குழந்தைகள் உள்பட 41 உயிர்கள் பறிபோனது. இந்த சம்பவத்துக்காக இன்றைய முதல்வர், அன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூட கூறாமல், மக்களைச் சந்திக்காமல் ஓடிப் போனார்.
பத்திரிகையாளர்கள் கேள்விக்கு கூட பதில் சொல்லவில்லை. இதற்காக எந்தவொரு குற்றவுணர்ச்சியோ, மனசாட்சியோ இல்லாதவர் தான் இந்த முதல்வர். இப்போது நடைபெறும் தேர்தல் இயற்கையாக வந்ததல்ல. சோபா அனுப்பி கட்சிகளை அழைத்தார். அதிமுகவை இரண்டாக பிரித்து, அதில் ஒரு பிரிவினருக்கு மட்டும் சோபா அனுப்பினார்.
திமுக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பொய் பரப்பினார். ஆனால், விஜய் புதிய டெக்னாலஜியாக எம்எல்ஏக்களையே விலைக்கு வாங்கிவிட்டார். 10 நாட்களில் அதிமுக எம்எல்ஏக்கள் தவெக பக்கம் சென்றுவிட்டனர். அவர்கள்தான் மீண்டும் உங்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்கள். ஆனால், தொகுதி மக்கள் தவெக வேட்பாளர்களை விரட்டியடிக்க தொடங்கி விட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
கனிமொழி இன்று பிரச்சாரம்: இதேபோல் தாராபுரம் தொகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி இன்று (28-ம் தேதி) தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க உள்ளார். இதன்படி மாலை 4.30 மணிக்கு குண்டடம் மேற்கு ஒன்றியம், மானூர்பாளை
யத்தில் தொடங்கி, கோவிந்தாபுரம், மணக்கடவு, கிளாங்குண்டல் உள்ளிட்ட 4 இடங்களில் திறந்த வேனில் இருந்தபடியே தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார். இதனை திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.