சென்னை: காந்தி ஜெயந்தி, ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, சென்னையில் இருந்து கொல்லத்துக்கு 2 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வரும் அக்டோபர் மாதம் அடுத்தடுத்து பல விடுமுறை நாட்கள் வருகின்றன. காந்தி ஜெயந்தி அக்.2-ம் தேதியும், ஆயுதபூஜை அக்.19-ம் தேதியும், விஜயதசமி அக்.20-ம்- தேதியும் அடுத்தடுத்து வருகிறது. இதையொட்டி, சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன் விவரம்:
சென்னை எழும்பூரில் இருந்து அக்.1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் இரவு 11.40 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06117) புறப்பட்டு, மறுநாள் மாலை 4.20 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.
மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து அக்.2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் மாலை 6.45 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06118) புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக கொல்லத்தை அடையும். சென்னை எழும்பூரில் இருந்து அக்.3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் இரவு 11.40 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06121) புறப்பட்டு, மறுநாள் மாலை 4.20 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.
மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து அக்.4, 11, 18, 25, நவ.1 ஆகிய தேதிகளில் மாலை 6.45 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06122) புறப்பட்டு, மறுநாள் காலை 11.35 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (செப்.23) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.