ஸ்ரீநாத், பி.மதன்ராஜா
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்துக்கு மீண்டும் இரண்டு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. இம்முறை தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் வென்றவர்கள் அமைச்சர்களாகி உள்ளனர்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சராக தூத்துக்குடி தொகுதியில் வெற்றிபெற்ற ஸ்ரீநாத், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சராக ஓட்டப்பிடாரம் மதன்ராஜா ஆகியோர் பதவியேற்றனர்.
ஸ்ரீநாத், சினிமா நடிகர் மற்றும் இயக்குநராக பணியாற்றியவர். முதல்வர் விஜய்யின் நெருங்கிய நண்பரான இவர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜி.ஆர்.எட்மண்ட், பழம்பெரும் நடிகர் சந்திரபாபு ஆகியோரது உறவினர் ஆவார். முதல் முறையாக தூத்துக்குடி தொகுதியில் களம் கண்ட இவர், யாரும் எதிர்பாராத வகையில் திமுக முன்னாள் அமைச்சர் பி.கீதாஜீவனை 37,731 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
மீனவர் சமுதாயத்தை சேர்ந்த இவருக்கு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் வரவேற்றுள்ளனர்.
இதேபோல், ஓட்டப்பிடாரம் தனித் தொகுதியில் முதல் முறையாக களம் கண்ட பி.மதன்ராஜா, திமுக வேட்பாளர் ராமஜெயத்தை 29,083 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் வென்ற ஒருவர் அமைச்சராவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடதக்கது. இதனால் ஓட்டப்பிடாரம் தொகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்துக்கு இரண்டு அமைச்சர் பதவி என்பது கடந்த 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து வருகிறது. 2011-ல் அமைந்த அதிமுக அமைச்சரவையில் தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன், ஸ்ரீவைகுண்டம் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் அமைச்சரானார்கள்.
2016-ல் அமைந்த அதிமுக அமைச்சரவையில் ஸ்ரீவைகுண்டம் சண்முகநாதன் மற்றும் கோவில்பட்டி கடம்பூர் ராஜூ ஆகியோர் அமைச்சர்களானார்கள். தொடர்ந்து 2021-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த திமுக அமைச்சரவையில் தூத்துக்குடி பி.கீதாஜீவன், திருச்செந்தூர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அமைச்சர்களானார்கள்.
அந்த வரிசையில் தற்போது தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள இருவருக்கும் ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன.
தொழில் துறை, வேளாண்மை, நீர்வளம், மீன்வளம், உப்புத் தொழில் போன்ற முக்கிய துறைகளில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அவைகளை சமாளித்து மாவட்டத்தை எவ்வாறு வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.