தமிழகம்

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழப்பு

நிரந்தர தீர்வு கோரி மக்கள் போராட்டம்

ஆர்.டி.சிவசங்கர்

கூடலூர்: கூடலூரை அடுத்துள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாலம்வயல் பகுதியில் காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், காட்டு யானை தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு கோரி உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல பொதுமக்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்துள்ள தேவர் சோலை அதன் சுற்றுவட்டார பகுதிகள் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ளது. வனப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக இந்தப் பகுதிகளில் சமீப காலமாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், தேவர் சோலை அருகே உள்ள காரக்குன்னு கிராமத்துக்கு அப்பையா (65), ரவி (60) ஆகியோர் நேற்று இரவு நேரத்தில் பாலம்வயல் பகுதியில் தங்களின் குடியிருப்புக்கு வந்து கொண்டிருந்தபோது வனப்பகுதியில் இருந்த காட்டு யானை இருவரையும் தாக்கியுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இருவரும் நேற்று இரவு முழுவதும் வீட்டுக்கு வராத நிலையில், இன்று காலை இருவரையும் தேடும்போது காட்டு யானை தாக்கி இறந்துள்ளது தெரியவந்தது.

இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், காட்டு யானை தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல அப்பகுதி மக்கள் மறுப்பு தெரிவித்து, மக்கள் மறியலில் ஈடுபட்டனர். வனத்துறையினர் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT