மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்த இரு பெண் தொழிலாளிகளின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட போலீஸார், தீயணைப்பு வீரர்கள்.
மதுரை: மதுரை அருகே சிலைமானில் 16 அடி கான்கிரீட் குழியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டு 2 பெண் தொழிலாளிகள் உயிருடன் மண்ணுக்குள் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரை விரகனூரைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் சிலைமானில் உள்ள திரையரங்கம் அருகே புதிதாக திருமண மண்டபம் ஒன்றை கட்டுகிறார். இதற்கான கட்டுமான பணியில் புளியங்குளம் தங்கவேல் மனைவி தமிழரசி (60), கிழக்கு சிலைமான பெருமாள் மனைவி தனலட்சுமி (46) உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர். சிமென்ட் தூணுக்கான 16 அடி ஆழ குழியில் கம்பி கட்டி சிமென்ட் கான்கிரீட் கொட்டப்பட்டு இருந்தது. அப்போது குழியில் சிதறிக் கிடந்த சிமென்ட் கலவையை அப்புறப்படுத்தும் பணியில் தமிழரசி, தனலட்சுமி ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அருகே 16 அடி ஆழமுள்ள குழியில் நடந்த கான்கிரீட் பணியின்போது ஏற்பட்ட அதிர்வால் தமிழரசி, தனலட்சுமி பணிசெய்த கான்கிரீட் குழியில் மேலே குவித்து வைத்திருந்த மண் திடீரென சரிந்து விழுந்தது. இதில் 2 பெண் தொழிலாளிகளும் மண்ணுக்குள் புதைந்தனர். பரிதாபமாக உயிரிழந்தனர். இதைப் பார்த்த சக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த சிலைமான் காவல் ஆய்வாளர் முகமது இஸ்ரீத் மற்றும் போலீஸார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. கட்டுமானப் பணியின்போது பரிதாபமாக 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.