பழநி: கொடைக்கானலில் நாளையும் (மே 2), நாளை மறுநாளும் (மே 3) வனத்துறை சுற்றுலா இடங்களை இலவசமாக சுற்றி பார்க்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள அனைத்து வனத்துறை சுற்றுலா இடங்களுக்கும் ஒரே இடத்தில் ‘க்யூஆர்’ குறியீடு மூலம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையால் பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு அந்தந்த இடத்திலேயே தனியாக நுழைவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி, இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாளையும் (மே 2), நாளை மறுநாளும் (மே 3) வனத்துறை சுற்றுலா இடங்களை இலவசமாக சுற்றி பார்க்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் கூறியதாவது: ”கொடைக்கானலில் அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு மே 2 மற்றும் மே 3 ஆகிய 2 நாட்களும் கட்டணமின்றி இலவசமாக சுற்றி பார்க்கலாம்.
மேலும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, வனத்துறை சுற்றுலா இடங்களுக்கான நுழைவு சீட்டு, கொடைக்கானல் பேருந்து நிலையம், பிரையன்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட 5 இடங்களில் வனத்துறை மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘க்யூஆர்’ குறியீடு மூலம் வரிசையில் நிற்காமல் உடனடியாக டிக்கெட் பெறும் நடைமுறை மே 4ம் தேதி முதல் செயல்படுத்தப்படும்.” என்று ஆட்சியர் தெரிவித்தார்.