சென்னை: குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சென்னை வருகையை முன்னிட்டு, 2 நாட்களுக்கு சென்னையில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் பயணிக்கும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கொட்டிவாக்கத்தில் நெல்லை நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் 42-வது ஆண்டு விழா நவ.21 மதியம் 2.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார்.
மேலும், நெல்லை நாடார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியையும் திறந்து வைக்கிறார். இதுதவிர, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க உள்ளார். குடியரசுத் துணைத் தலைவரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை பெருநகர காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக நாளை மறுநாள் (நவ.21) மற்றும் அடுத்த நாளான நவ.22-ம் தேதி ஆகிய 2 நாட்களுக்கு மீனம்பாக்கம், கொட்டிவாக்கம், கிண்டி, நீலாங்கரை, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளும், அவர் பயணிக்கும் வழித்தடங்களும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனால், மேற்கண்ட பகுதிகளில் அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு உட்பட்ட நடவடிக்கைகளைத் தவிர, ட்ரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகளைப் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சென்னையில் அடுத்த டிச.15-ம் தேதி வரை ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் விமானங்கள், பாரா கிளைடர்கள், பாரா மோட்டார்கள், ஹேங் கிளைடர்கள் மற்றும் ஹாட் ஏர் பலூன்கள் உள்ளிட்டவற்றைப் பறக்கவிட ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் பிறப்பித்துள்ள இந்தத் தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், குடியரசுத் துணைத் தலைவரின் வருகையை முன்னிட்டு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.