அரவிந்த், விஸ்வேஷ்.
சென்னை: புதிய அரசு பதவியேற்க உள்ள நிலையில், உளவுத்துறை ஐஜி-க்கு உதவும் வகையில், எஸ்பி-க்கள் இருவரை நியமித்து டிஜிபி சந்தீப் ராய்ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி விஜய் ஆட்சி அமைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக, தேர்தல் நடைபெற இருந்த நேரத்தில் உளவுத்துறை ஐஜி-யாக இருந்த செந்தில்வேலன் மாற்றப்பட்டு, அவிநாஷ் குமார் நியமிக்கப்பட்டார். அவர் அந்த பதவிக்கு புதிது என்பதாலும், தற்போது புதிய அரசு பதவி ஏற்க உள்ள நிலையிலும், உளவுத்துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தற்போது, அத்துறைக்கு கூடுதலாக ஐபிஎஸ் அதிகாரிகளான 2 எஸ்பி-க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அரியலூர் மாவட்ட எஸ்பியாக இருந்த விஸ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி, கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி எஸ்.அரவிந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பிறப்பித்துள்ளார்.
உளவுத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், காவல் துறை தொடர்பான உளவுத் தகவல்களைத் துரிதமாகக் கையாள்வதற்கும், நடந்து முடிந்த தேர்தல் தொடர்பான அவசரப் பணிகளில் கலந்து கொள்ளவும் இவர்களின் நியமனம் உதவும் என போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த உத்தரவு வரும் வரை பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அரியலூர் மாவட்ட எஸ்பி பணியையும், விழுப்புரம் எஸ்பி கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்கள் என, டிஜிபி உத்தரவில் மேலும் தெரிவித்துள்ளார். புதிய அரசு பொறுப்பு ஏற்க உள்ளதால் அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டும் புதிய எஸ்பி-க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.