அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி
சேலம்: தவெகவின் 100 நாள் ஆட்சி ரீல்ஸ் ஆட்சியாக, ரீல் ஆட்சியாக இருக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: கோவையில் கல்லூரி மாணவரை, சக மாணவர்கள் கொலை செய்தது மிகவும் துயரமானது.
இதுதொடர்பாக சட்டப் பேரவை யில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்துள்ளோம்.
இந்த விவகாரத்தில் அரசு முழு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. கடந்த 5 ஆண்டுகளில் இருந்ததை விட, தற்போது போதைப்பொருள் புழக்கம் அதிகமாகிவிட்டது.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு இதுவே முக்கிய காரணம். போதைப்பொருள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல போராட்டங்கள் நடந்துள்ளன. விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடிக்காக போராடி வருகின்றனர். மேகேதாட்டு பிரச்சினைக்காக, அதிமுக போராட்டம் நடத்தியுள்ளது.
எந்த ஆட்சியிலும் குறுகிய காலத்தில் விலைவாசி உயர்வு ஏற்படவில்லை. ஆனால், தவெக ஆட்சியின் குறுகிய காலத்தில் அரிசி விலை கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது.
அனைத்து கட்சிக் கூட்டம் தேவை: மேகேதாட்டு விவகாரத்தில், அனைத்துக் கட்சிக் கூட்டம், டெல்டா விவசாயிகளின் கூட்டம் நடத்தி, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும்.
சேலம் உட்பட 20 மாவட்டங்களுக்கு குடிநீர் கிடைக்காது. ஆனால் மேகேதாட்டு விவகாரத்தில் தவெக அரசு மெத்தனமாக உள்ளது. அக்கட்சி ஆட்சி அமைக்க துணை புரிந்துள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக ஆகியவை வலியுறுத்தியும் கூட, அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படவில்லை.
காரணம், காவிரி விவகாரம் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. தமிழகத்தில் ஏற்கெனவே வறட்சி நிலவுகிறது. காவிரியில் நீர் வேண்டும் என்று ஜூன் மாதத்திலேயே கேட்டிருக்க வேண்டும். ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் தான் தவெக அரசு வழக்கு தொடர்ந்தது. ஜூனில் 9.15 டிஎம்சி, ஆகஸ்ட்டில் 45 டிஎம்சி பெற்றிருக்க வேண்டும். காவிரி நீரைப் பெறாததால், ஏற்கெனவே குறுவை சாகுபடி நடக்கவில்லை. இப்போது சம்பாவுக்கும் வாய்ப்பில்லை. தவெகவின் 100 நாள் ஆட்சி ரீல்ஸ் ஆட்சியாக, ரீல் ஆட்சியாக இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை தவெக அரசு நிறைவேற்றவில்லை.
தொழில் முதலீட்டு மாநாடு நடத்தினார்கள். முதலீட்டுக்கு வரும் நிறுவனங்கள், திட்டம் 1, திட்டம் 2 என விரிவாக்கம் செய்வார்கள். அப்படித்தான், அதிமுக, திமுக ஆட்சியில் ஏற்கெனவே இங்கு முதலீடு செய்துள்ள நிறுவனங்கள், தற்போதைய முதலீட்டு மாநாட்டிலும் விரிவாக்கம் செய்துள்ளன. ஆனால் இப்போது பெரிய அளவிலான முதலீடு, புதிய முதலீடு எதுவும் வந்ததாகத் தெரியவில்லை என்றார்.
முன்னதாக, 11 வகையான மதுவுக்கு டாஸ்மாக்கில் தடை விதிக்கப்பட்டது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ‘எனக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது; எனவே அதைப் பற்றி தெரியவில்லை’ என்றார். பேட்டியின்போது, கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு, முன்னாள் அமைச்சர் மோகன், எம்எல்ஏ. பழனி உள்பட அதிமுகவினர் பலர் உடனிருந்தனர்.