தமிழகம்

விஜய் வருகையும், பள்ளி மாணவர்களின் ‘திடீர்’ அரசியல் ஆர்வமும் - ஆரோக்கியமா, ஆபத்தா?

பாரதி ஆனந்த்

தமிழக அரசியல் களம் எப்போதுமே திரைத் துறைக்கு எட்டும் தூரத்தில்தான் இருந்திருக்கிறது. அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் என திரைத் துறைத்துக்கும் தமிழக அரசியலுக்குமானா தொடர்பு சற்று நீளமானதே. நேரடி அரசியல் மட்டுமல்லாது தேர்தல் நேரத்தில் மட்டும், ஒவ்வொரு கட்சிக்கும் பிரச்சாரம் செய்வதற்காக திரளும் திரைப் பிரபலங்களும் தமிழ்த் திரையுலகில் உண்டு. ஆனால், தாங்கள் கொண்ட கொள்கையை எடுத்துச் சொல்ல திரை அடையாளத்தை ஓர் ஊடகமாக பயன்படுத்துவது வேறு; திரை அடையாளத்தை மட்டுமே வைத்துக் கொண்டு ‘நான் அரசியல்வாதி’ என நிறுவ முயற்சிப்பது வேறு.

ஏதோ மூன்று மணி நேர சினிமாவில் தன்னை ராணுவ வீரனாக, டாக்டராக, காவல் துறை அதிகாரியாகவே மக்கள் நம்பிவிடுவதுபோல் நடித்தால் விருது தந்து கவுரவிக்கலாம். ஆனால் அரசியல்மயமாகாமல், அரசியல் அறியாத விசிறிகளிடம் ‘நான் வெற்றிபெற்றவன்... இமையம் தொட்டுவிட்டவன்’ என்றெல்லாம் நிறுவ முயற்சிப்பது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சிந்திக்க வேண்டும்.

திரையில் நடிகர் விஜய்யின் வீச்சு மிகப் பெரியது. அவருக்கான ஸ்டார் வேல்யூ அல்டிமேட். அவருக்கான ஃபேன் பேஸ் பிரம்மாண்டம். இதெல்லாம் சற்றும் மறுப்பதற்கு இல்லை. அதனால் அவரது திரை பிம்பம் கொண்டாடித் தீர்க்கப்படுகிறது. அந்த ரசிக மனநிலையை அரசியல் என நம்பவைப்பதன் விளைவாகவே இன்று வீட்டுக்கு வீடு இருக்கும் பள்ளிக் குழந்தைகள், ஓட்டுரிமை கூட பெற்றுவிடாத சுட்டிகளில் ஒரு தரப்பினர் ‘விஜய்க்குதான் ஓட்டுப்போட வேண்டும்’ என்று பெற்றோர்களுக்கு கட்டளை போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பின்புலத்தில்தான், விஜய் வருகையும், பள்ளி மாணவர்களின் ‘திடீர்’ அரசியல் ஆர்வமும் கடந்து சென்றுவிட இயலாத விவாதப் பொருள் ஆகிறது.

          

விக்கிரவாண்டி மாநாடு தொட்டே விஜய்யின் இலக்கு என்பது கூட்டம் சேர்ப்பதில்தான் இருந்திருக்கிறது என்பதே தேர்ந்த அரசியல் விமர்சகர்கள் பலரின் வாதம். அந்தக் கூட்டத்துக்கு பள்ளி மாணவர்கள் வந்தாலும் தவெக அதை லாபக் கணக்கில்தான் வரவு வைக்கிறது. விஜய் கட்சியின் ஆதவ் அர்ஜுனா சொல்வதுபோல் வீட்டுக்கு வீடு விஜய்க்கு ஓட்டு இருக்கிறதோ இல்லையோ, வீட்டுக்கு வீடு இருக்கும் பள்ளி படிக்கும் மாணவர்கள் அபிமானம் பரவலாகவே இருக்கிறது.

அரசியலில் ஆத்திசூடி கூட தெரியாத பள்ளிக் குழந்தைகள் இன்று விஜய்க்கு வீடுகளில் வாக்குக்காக வக்காலத்து வாங்குகிறார்கள். ஏனென்றால் விஜய் அவர்களின் மொழியில் பேசுகிறார். சினிமாவில் சிரிப்பது, கொஞ்சுவதும், கோபப்படுவதும், சபதம் போடுவதும் போல் பொதுவெளியில் நின்று பேசுகிறார். திரைப்படம், தனது பட புரோமோஷன் தாண்டி எங்குமே காணக் கிடைக்காத தங்களின் விஜய் இப்போது சாலையில், மேடையில் வெயிலில் நின்று நம் மொழியில் பேசுகிறார் என்பது பள்ளி மாணவர்களுக்கு அவர் மீது ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.

‘நான் உச்ச நட்சத்திரமாக இருக்கிறேன், அதை உதறவிட்டு உங்களுக்காக வருகிறேன்’ என்று அவர் சொல்லும் வசனங்கள் அவருக்கு பிரதி உபகாரம் செய்ய வேண்டும் என்ற எமோஷனல் நெருக்கடியை அவர்களுக்குக் கடத்துகிறது. அதனால்தான் பெற்றோரிடமும், பெரியவர்களிடமும் விஜய்க்காக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை இந்த 2+ ஆண்டுகளில் விஜய் தன் கட்சியை அமைப்பு ரீதியாக வலிமைப்படுத்தியதைக் காட்டிலும், ரசிகர்கள் மத்தியில் தன் மீது உணர்ச்சி இணைப்பை ஏற்படுத்தியிருக்கிறார். கொள்கையை கொண்டு சேர்த்ததைவிட என் கார் கடக்கையிலாவது என்னைப் பார்த்துவிட மாட்டோமா என்று நீலாங்கரையில் நீங்கள் ஏங்கி நிற்க வேண்டாம். அவ்வப்போது நானே உங்கள் முன்வந்து நிற்கிறேன் என்றொரு பாண்டிங்கை உருவாக்கியிருக்கிறார். இதுவும் சிறுவர்களுடன் சோஷியல் மீடியா மூலம் ‘கனெக்ட்’ ஆவதை கண்டுகொள்ள முடிகிறது.

பள்ளி மாணவர்களின் இந்த திடீர் அரசியல் ஆர்வம் எத்தகையது என்று மூத்த அரசியல் விமர்சகரிடம் வினவியபோது, “விஜய்க்கு இப்போது பள்ளி செல்லும் மாணவர்கள் மட்டுமல்ல ஜென்ஸீ( GenZ) எனப்படும் 1997 முதல் 2012 வரை பிறந்த தலைமுறையினருக்கும் ஈடுபாடு இருக்கிறது.

பள்ளிப் பருவத்தில் இருந்தே அரசியல் அறிவை வளர்த்துக் கொள்வதுதான் வளர்ந்து நிற்கும்போது தனக்கான சித்தாந்தம் இதுதான் என்று ஒரு தனி மனிதன் தீர்மானிக்க உதவும். ஆனால், விஜய்யை அரசியல் தலைவராக ஏற்பவர்கள் எதைப் பேசுவார்கள்? அரசியல் என்றால் அது மாநிலத்தின் / நாட்டின் சமூகப் பொருளாதாரத்தை உள்ளடக்கியது.

ஆகவே, அரசியல் தலைவனுக்கு, கட்சிக்கு அதன் மீதான புரிதல், அதை வளர்த்தெடுப்பதில் இலக்கு வேண்டும். தலைவன் என தன்னை அடையாளப்படுத்துபவன், ‘இதுதான் இலக்கு’ என்று சொல்ல கேட்பவன், ‘இவன் நாம் நினைப்பதைப் பேசுகிறான்’, ‘இவனை தலைவனாகக் கொள்ளலாம்’ என முடிவு செய்ய வேண்டும். ஆனால், ‘என் இலக்கு பதவி... அதற்கு இப்போது பதிவியில் இருப்பவர்களை ஒழிக்க வேண்டும்’ என்று முற்படுவது அரசியல் அல்ல... போட்டி! அதனால்தான் விஜய் - தேர்தலில் எனக்கும் சிஎம் சாருக்கும் தான் போர் என்று பேசுகிறார். இத்தகைய போக்கு ஆபத்தானது” என்கிறார்.

சிறார் நலன் சார்ந்து இயங்கி வரும் சமூக ஆர்வலர் ஒருவர், “விஜய் அரசியல்மயமாகாவிட்டாலும் தனது இருப்பால் ஆளும், ஆண்ட கட்சிகளுக்கு ஒருவித நெருக்கடியைக் கடத்தியிருப்பதை மறுக்க முடியாது. அவரது தேர்தல் ஓட்டு அல்காரிதங்களை அசட்டை செய்யக் கூடாது. வீட்டில் தேர்தல் அரசியல் பேச்சு அப்பாக்களின் உரிமையாக இருந்த காலம் போய் பெண்களும், பள்ளிக் குழந்தைகளும் கூட வீடுகளில் அரசியல் பேசுகின்றனர்.

கேரளாவில் பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் அரசியல் சார்பெடுப்பது இயல்பு. இங்கு பள்ளிகளில் அரசியல் பேச அனுமதியில்லை. கல்லூரிகளில் கூட அரசியல் சார்ந்த உரையாடல்கள் இல்லை. தீவிர அரசியல் என்பது படிப்புக்குத் தடையாக இருக்கலாம். ஆனால், அரசியல் அறிவு என்பது பின்னாளில் நாட்டு நலனுக்கு வித்திடும் அரசியல் தெளிவுக்கு வழிவகுக்கும். அந்த வகையில் விஜய்யின் வருகையும் பள்ளி மாணவர்களின் அரசியல் ஆர்வமும் பெரிய வீச்சுதான். ஆனால், இது நெறிப்படுத்தப்பட வேண்டும்.

அதேபோல், தேர்தல் நேரத்தில் போராட்டங்கள் நடைபெறுவது வழக்கம்தா என்றாலும், அதை எதிர்க்கட்சிகள் ஊதிப் பெரிதாக்குவது புதியது அல்ல என்றாலும், இன்று களத்தில் ‘நான்தான் மாற்று’ என்று விஜய் பெருங்கூட்டத்துக்கு சொல்லிக் கொண்டே இருப்பதால்தான் ஆளுங்கட்சி அத்தனைப் போராட்டங்களையும் தற்காலிகமாக முடித்துவைத்திருக்கிறது. இது ஓர் ஆரோக்கியமான போக்குதான்” என்றார்.

அதேவேளையில், திமுக - அதிமுக - காங்கிரஸ் - விசிக - பாமக - நாதக - பாஜக என எல்லா காட்சிகளுக்கும் ஒருவரை இன்னொருவர் அரசியல் ரீதியாக எதிர்கொள்ளத் தெரியும். ஆனால், அரசியல்மயமாக்கப்படாத தலைவரையும், கூட்டத்தையும் கொண்ட ஒரு கட்சியை எப்படி எதிர்கொள்வது என்ற சவால் மட்டும் தான் தவெக vs தமிழக அரசியல் கட்சிகளின் நிலை என்று வாதிடப்படுகிறது.

விஜய்யின் வருகையால் திடீரென ஏற்பட்டுள்ள பள்ளி மாணவர்கள் மத்தியிலான அரசியல் ஆர்வம் குறித்து அரசுப் பள்ளி ஆசிரியரான ஸ்ரீதரனிடம் கேட்டபோது, “நான் 9-ம் வகுப்பு மாணவர்களிடம் ‘ஹீரோ என்றால் யார்?’ என்று பேசுவதுண்டு. 9-ம் வகுப்பு பாடத்தில் ‘ஆளுமைகள்’ பற்றியப் பாடம் இருப்பதால், இந்தப் பேச்சு நீளும். எனது கேள்விக்கு ரஜினி, விஜய், அஜித் தொடங்கி ஜிவி பிரகாஷ் வரை ஹீரோக்களை அவர்கள் பட்டியலிடுவார்கள்.

‘சரி அவர்கள் ஏன் ஹீரோ?’ என்று கேட்டால், ‘அவர்கள் பிரச்சினைகளை சரி செய்வார்கள், உதவுவார்கள்’ என்பார்கள். ‘உங்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பது யார்?’ என்று கேட்டால், அம்மா, அப்பா தொடங்கி பக்கத்து வீட்டு நண்பன் வரை சொல்வார்கள். ‘அப்படியென்றால் உங்கள் ஹீரோ யார்?’ என்று கேட்டு ஆளுமைகள் பற்றி விரிவாகப் பேசுவோம்.

குழந்தைகளுக்கு திரையில் பார்ப்பவர்கள் தான் ஹீரோவாக இருக்கிறார்கள். ஆனால், உண்மையில் சினிமாவை படிப்பவர்களுக்கு ஹீரோவும், வில்லனும் இல்லை... ப்ரோடகனிஸ்டும், ஆன்டகனிஸ்டும்தான். ஹீரோ என்ற பதத்துக்கு காதலன், வீரன், வெற்றியாளன் என்று பல பொருட்கள் இருக்கின்றன. அவ்வாறே அரசியலுக்கும் ஆட்சி அரசியல் தொடங்கி ஊழல் அரசியல் வரை பல பெயர்கள் இருக்கின்றன.

இங்கே நம் குழந்தைகள் பார்த்து வளர்வதெல்லாம் அதிகாரம்தான். கல்வி நிலையம் தொடங்கி எல்லாவாற்றிலும் அதிகாரத்தைப் பார்த்து வளர்கின்றனர். ஜனநாயகம் என்றால் இதுதான் என்று அதன் ஆழ, அகலத்தை முழுவீச்சில் பேசும் சினிமாவையோ, ஹீரோக்களையோ அவர்கள் பார்த்ததில்லை. அவர்கள் ஹீரோக்கள் ஏதோ ஒன்றை அட்டகாசமாகச் செய்யும் திரை ஹீரோ. அவர்கள் வளர்ந்த / வளரும் அதிகார வரம்புக்குள் அவர்களது சிறிய புரிதலுக்கு எட்டியவர்கள்தான் ஹீரோக்களும், அரசியலும்.

நம் கல்வி கட்டமைப்போ, கல்வி முறையோ அரசியலைப் பாடமாகப் புகட்டுவதில்லை. அரசியல் அங்கங்களைத் தான் பேசுகின்றன. இத்தகையச் சூழலில் குழந்தைகளின் அரசியல் பார்வை, அவர்கள் வீட்டில் மற்ற விஷயங்களில் தங்களின் ஆதிக்கத்தைச் செலுத்த நினைத்து, அதில் சிலவற்றில் வெற்றியும் பெறுவது போன்றதான முயற்சிதான்.

இந்த மாதிரியான தெளிவற்ற சூழலில் பெற்றோர் முன் இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒன்று, சில நேரங்களில் பிள்ளைகள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டு தாங்கள் நினைப்பதைச் செய்வது, இல்லை எனில் பிள்ளைகளால் இன்ஃப்ளூவன்ஸ் ஆகி அவர்களின் விருப்பப்படி நடப்பது. இரண்டுக்குமே சாத்தியக் கூறுகள் இருக்கத்தான் செய்கின்றன” என்றார்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் விஜய் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறித்து பேராசிரியர் முனைவர் மஞ்சுளா கூறுகையில், “விஜய் அரசியல் வருகையை, ஒரு புதிய கட்சியின் வருகை என்ற அளவிலேயே நான் பார்த்தேன். அவரது அரசியல் ஆரோக்கியமானதாக இல்லை என்பதை என்னால் இப்போது உணர முடிகிறது. அவர் உண்மையிலேயே அரசியல் அறிவோடுதான் இருக்கிறாரா என்ற சந்தேகம் இருக்கிறது.

இந்தச் சூழலில் அவருக்காக பள்ளி மாணவர்கள் வரிந்து கொண்டு பேசுவதென்பது, ஊர் சொலவடைபோல், இருளில் விட்டத்தில் பாய்வதற்கு நிகரானது. இவர்களின் கொள்கை என்ன, எதை முன்னிறுத்தி அரசியல் செய்வார்கள் என்று தெரியவில்லை. அரசியல் தலைவன் மக்களுக்காக என்ன செய்கிறான் என்பது முக்கியம். கரூரில் நடந்த துயரச் சம்பவத்துக்குப் பின், தனக்காக வந்து உயிரிழந்த மக்களைக் கூட நேரில் சென்று சந்திக்காதவர், இனியும் என்ன செய்துவிடுவார்?

சமீபத்தில் நடந்த வேலூர் பிரச்சாரத்தில் விஜய் கண் கலங்கிப் பேசியதை தவெகவினர் உருகி உருகி கொண்டாடுகின்றனர். இதில் என்ன அரசியல் இருக்கிறது என்று தெரியவில்லை. விஜய் தன்னை கண்மூடித்தனமாக நம்பும் கூட்டத்தை உருவாக்க முயற்சிக்கிறார்.

இன்றைய குழந்தைகள், இளைஞர்களுக்கு உடனடி பலன் என்பதில்தான் ஆர்வம். நீண்ட கால பயன், ஆழமான, வாழ்நாளைக்கான பலன் மீது அவர்களுக்கு அக்கறையும், தொலைநோக்குப் பார்வையும் இல்லை. அதனாலேயே தன் சமகாலத்தில் தனக்கு பிடித்தமான ஹீரோ வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

விஜய்யை பின்தொடர்பவர்களுக்கு அரசியல் புரிதல் இல்லை என்றால், அந்தப் புரிதல் இன்மையை தனது பலமாக்குகிறார் விஜய். இத்தகைய அரசியல் தமிழ்நாட்டுக்கு துரதிர்ஷ்டவசமானது, அதுவும் பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் ஆபத்தானது என்று நான் ஆணித்தரமாக சொல்வேன்” என்றார்.

SCROLL FOR NEXT