தமிழக மக்களின் நலனுக்காக, தவெக தலைவர் விஜய், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டும் என மத்திய அமைச்சரும், இந்தியக் குடிய ரசுக் கட்சியின் தலைவருமான ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் நேற்று அவர் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தில் மூன்றாவது முறையாகப் பணியாற்றி வருகிறேன். பிப்.14, 2019 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீர மரணமடைந்தனர். அந்த தியாகிகளின் குடும்பங்களுக்குத் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாகிஸ்தான் அண்டை நாடு என்பதால் இந்தியா அதனுடன் மோதலை விரும்பவில்லை. சாலை மேம்பாடு, இதர பிற்படுத்தப்பட்டோர் நலன், மகளிர் அதிகாரம் மற்றும் ஒட்டுமொத்த தேசா முன்னேற்றத்தில் அரசு தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறது.
2015-ல் தொடங்கப்பட்ட பிரதமரின் முத்ரா திட்டத்தின் மூலம் ரூ.50,000 முதல் ரூ.20 லட்சம் வரையிலான கடன்கள் வழங்கப்பட்டு, தமிழகம் உட்பட நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். உஜ்வாலா திட்டத்தின் கீழ் 10 கோடிக்கும் அதிகமான எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் லட்சக் கணக்கானோர் இதனால் பயனடைந்துள்ளனர்.
அவசர சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் வரை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தினால் ஏராளமான மக்கள் பயனடைந்துள்ளனர். ரூ.53 லட்சம் கோடி மதிப்பிலான மத்திய பட்ஜெட்டில் விவசாயம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காகப் பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் திமுகவை வீழ்த்தும். மேற்கு வங்கத்திலும் பாஜக ஆட்சிக்கு வரும். இந்தியக் குடியரசுக் கட்சிக்கு தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளது. தமிழக மக்களின் நலனுக்காக. தவெக தலைவர் விஜய். தே.ஜ கூட்டணியில் இணைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.