தமிழகம்

தனியே... தன்னந்தனியே... பிரச்சாரத்தில் தத்தளிக்கும் தவெக!

இரா.கார்த்திகேயன்

கோவை: தமிழக தேர்தல் களத்தில் புதிதாக களம் காணும் தமிழக வெற்றிக் கழகம், பிரச்சாரத்தில் போதிய ஒருங்கிணைப்பு இல்லாததாலும், வலுவற்ற கீழ்மட்ட கட்டமைப்பாலும் தனித்து விடப்பட்டுள்ளதை தேர்தல் களத்தில் காண முடிகிறது.

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் பலர் புதுமுகங்கள். கட்சியே புதிதுதானே என்றாலும், இவர்கள் விஜய் நற்பணி மன்றத்தில் இல்லாத புதியவர்கள்.

பிரச்சாரம் முடிய இன்னும் முழுமையாக 2 வாரங்களே உள்ள நிலையில், பிரதான கட்சிகள் தீவிர களப்பணியாற்றி வருகின்றன.ஆனால், போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் தவெக வேட்பாளர்கள் தன்னந்தனியாக பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். இது மக்களிடம் எந்தளவுக்கு எடுபடும் என தெரியவில்லை.

          

கோவை மாவட்டம் சூலூரில் 2 நாட்களுக்கு முன்பு, அதிகாலை நேரத்தில் தவெக கட்சித் துண்டுடன் தனியாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டவரை, தவெகவினர் அழைத்து விசாரித்து, அவர்தான் வேட்பாளர் என தெரிந்துகொண்டனர்.

இப்படித்தான் பல்வேறு தொகுதிகளிலும் வேட்பாளர் அலைபேசி எண் கூட கிடைக்காத நிலை கட்சியினருக்கு உள்ளது. நிர்வாகிகளுக்கு சீட் தராமல், புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கும், வேறு கட்சியில் இருந்து வந்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதால் குழப்பம் நிலவுவதாக கட்சியினர் கூறுகின்றனர்.

சமூக வலைதளத்தில் பதிவிடும் கட்சியினரை, நேரில் பார்த்தால் கூட யாரென்று அறிந்துகொள்ள முடியாத அறிமுகம் இல்லாத நிலையில் தான் பலர் உள்ளனர். தொகுதியில் யார் வேட்பாளர், அவர் எங்குள்ளார், என்ன செய்கிறார் என்பது உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் கட்சியினருக்கு தெரியவில்லை.

கோவை வடக்கு மற்றும் கிணத்துக் கடவு தொகுதியில் போட்டியிடும் இருவர் மட்டுமே விஜய் ரசிகர்களாக இருந்து, நிர்வாக பொறுப்பில் இருந்த நிலையில் ‘சீட்’ பெற்றவர்கள்.

செங்கோட்டையன் மூலம் அழைத்து வரப்பட்ட கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில்குமார் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் கட்சியில் சேர்ந்தார். தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.பி.ராஜூவின் மகன் சதீஷ்ராஜ் கடந்த ஜனவரி மாதம் தான் கட்சியில் சேர்ந்தார்.

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வேட்பாளரும் தவெகவுக்கு புதியவர். பொள்ளாச்சி மற்றும் வால்பாறை உட்பட கோவை மாவட்டத்தில் வாய்ப்பு பெற்ற பெரும்பாலானவர்கள் ,

தமிழக வெற்றிக் கழகமாக அறிவிக்கப்பட்ட பின்பும் பொறுப்பில் இல்லாதவர்கள் தான். அதிமுக, திமுக போன்று வலுவான கீழ்மட்ட கட்டமைப்பும், ஒருங்கிணைப்பும் இல்லாததால் உதிரிப்பூக்களாக தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரம் அமைந்துள்ளது.

ஏற்கெனவே கட்சித் தலைவரை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்து வருவதாக பொதுவெளியில் விமர்சிக்கப்படும் நிலையில், தற்போது வேட்பாளர்களையும், நிர்வாகிகளையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருப்பதால் இது தேர்தலில் கடுமையாக எதிரொலிக்கும் என தொண்டர்கள் கருதுகின்றனர்.

திருச்சியில் நடிகர் விஜய் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். ஆனால் இங்கிருப்பவர்கள், கோவையில் அவிநாசி சாலையில் இருந்த அண்ணா சிலைக்கு மட்டும் மாலை அணிவித்தனர்.

அருகில் இருந்த எம்ஜிஆர், சிலைக்கு கூட மாலை அணிவிக்கவில்லை. கொள்கை குழப்பங்களும், கீழ்மட்ட அளவிலான ஒருங்கிணைப்பின்மையும் தவெகவின் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT