சென்னை: ‘எம் தாய்மொழியை மூன்றாம் இடத்துக்கு தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்’ என தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் தவெக கண்டனம் தெரிவித்துள்ளது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற 33-வது பட்டமளிப்பு விழாவில் மாநிலப் பாடலான ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ மூன்றாவதாகப் பாடப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தவெகவின் அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில், ‘நமது மனசாட்சி உள்ள மக்களாட்சியில் யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும். எம் தாய்மொழியை மூன்றாம் இடத்துக்கு தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். அதற்குக் காரணமாக ஒன்றிய பாஜக அரசாக இருந்தாலும் சரி, அல்லது ஆளுநராக இருந்தாலும் சரி கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம்.
எங்கள் நிலத்தில் எங்கள் மொழிக்கே முன்னுரிமை. இதை உறுதியாக நாம் நிலைநாட்டுவோம். சட்ட முன்னெடுப்புத் தேவை எனில், அதற்கும் தயாராகவே இருக்கிறோம்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.