அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களின் அமைப்பு செயலாளர் பொறுப்பு வகித்து வருகிறார். அவர் அதிமுகவில் அதிருப்தியில் உள்ள முன்னாள் எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியில் தீவிரமாக களம் இறங்கியுள்ளார்.
குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் கோட்டையாக கருதப்படும் சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏக்களுக்கு செங்கோட்டையன் நேரடியாக ஃபோனில் தொடர்புகொண்டு பேசி வருகிறார்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஒருவர் கூறுகையில், “அதிமுகவில் பழனிசாமியால் ஓரங்கட்டப்பட்ட மற்றும் அவரின் தலைமையை ஏற்க விரும்பாத முன்னாள், இந்நாள் எம்எல்ஏக்கள், மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் உள்ளனர். இந்த அதிருப்தியாளர்களுக்கு வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படாது.
அவ்வாறு ஓரம் கட்டப்பட்ட முன்னாள், இந்நாள் எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை செங்கோட்டையன் நேரடியாக செல்போனில் அழைத்துப் பேசுகிறார். அவரிடம் தேர்தல் செலவுக்கு பணம் எதுவும் இல்லை என்று கூறினாலும் ‘என்னை நம்பி வாங்க’ என தெரிவிக்கிறார்.
அவரது வார்த்தையை நம்பி கடந்த சில தினங்களுக்கு முன் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏவும், சேலம் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளருமான பல்பாக்கி கிருஷ்ணன், செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். இதுபோல் பலருக்கு தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
யார் யார் எல்லாம் தவெகவுக்கு தாவ உள்ளனர் என்பது வரும் நாட்களில் தெரியவரும். திமுக உள்ளிட்ட பிற கட்சியினரை செங்கோட்டையன் தொடர்பு கொள்வது கிடையாது. செங்கோட்டையனை வைத்து அதிமுகவை, பாஜக பலவீனப்படுத்தி வருகிறது. இதை பழனிசாமியும் நன்கு அறிவார். ஆனால் மயான அமைதி காத்து வருகிறார் என்றார்.