தமிழகம்

களத்தில் இல்லாதவர்கள்... - அதிமுகவையும் வம்புக்கு இழுக்கிறதா தவெக?

கரு.முத்து

“களத்தில் இருப்பவர்களை பற்றித்தான் பேச முடியும், களத்திலேயே இல்லாதவர்களை பற்றி எப்படி பேச முடியும்?” பெருந்துறை மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் விஜய் இப்படிப் பேசியது அதிமுக முகாமுக்குள் அனலை பரப்பிக் கொண்டிருக்கிறது.

தன்னையும் தனது கட்சியையும் வலைதளத்தில் வறுத்துக் கொண்டிருக்கும் நாதக-வை மனதில் வைத்துத்தான் விஜய் இப்படி பேசினார் என தவெக தரப்பில் சொல்லப்பட்டாலும், “ஆரம்பத்திலிருந்தே தனக்கும் திமுக-வுக்கும் தான் போட்டி என்று சொல்லி அதிமுக-வை குறைத்து மதிப்பிட்டு வரும் விஜய் பெருந்துறை கூட்டத்திலும், அதிமுக-வை மறைமுகமாக குறிப்பிட்டே அப்படிப் பேசி இருக்கிறார்” என்று தகிக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

கட்சி துண்டு துண்டாகி விட்டது என்று சொல்லப்பட்ட நிலையிலும் 2024 மக்களவைத் தேர்தலில் 23.5 சதவீத வாக்கு வங்கியை தக்கவைத்த கட்சி அதிமுக. அதற்குக் காரணம், கட்சியை வழி நடத்தும் தலைவர்களோ கூட்டணியோ அல்ல. எம்ஜிஆர் - ஜெயலலிதா என்ற முகவரியும் இரட்டை இலை என்ற முத்திரையும் சேர்ந்தே ஓரிடத்தில் இருந்தது தான். அப்படி இருக்கையில், ஜெயலலிதா, எம்ஜிஆர் பெயர்களைச் சொல்வதாலும் அவர்களது படங்களை சட்டைப் பையில் வைத்துக் கொள்வதாலும் மட்டுமே அதிமுக அபிமானிகளை யாரும் தங்கள் பக்கம் அத்தனை எளிதில் ஈர்த்துவிட முடியாது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

அண்ணாவும் எம்ஜிஆரும் பத்தாண்டு இடைவெளியில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள். அவர்கள் வழியில் அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறோம் என்று சொல்லி அவர்களின் பெயர்களை உச்சரிக்கும் விஜய், கட்சி பதாகைகளிலும் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். ஆனால், அப்படியெலலாம் ‘எம்ஜிஆர் படம்’ காட்டி யார் அழைத்தாலும் அவர்கள் பின்னால் சென்றுவிடக் கூடியவர்கள் இல்லை அதிமுக தொண்டர்கள்.

ஜெயலலிதாவுக்கு எல்லாமுமாக இருந்த சசிகலாவையும் ஜெயலலிதாவால் இரண்டு முறை முதல்வர் நாற்காலியில் உட்காரவைக்கப்பட்ட ஓபிஎஸ்ஸையுமே அதிமுக தொண்டர்கள் இடதுகையால் தள்ளிவிட்டார்கள். காரணம், எம்ஜிஆர் மாளிகையையும் இரட்டை இலையையும் தன்வசத்தில் வைத்திருக்கும் தலைவராக பழனிசாமி மட்டுமே அவர்களுக்குத் தெரிகிறார்.

தேர்தலுக்காக பழனிசாமி கிட்டத்தட்ட 175 தொகுதிகளில் மக்களை சந்தித்துப் பிரச்சாரம் செய்துமுடித்துவிட்டார். விருப்ப மனு வாங்கத் தொடங்கிய 2 நாட்களுக்குள்ளாகவே அதிமுக தலைமையகத்தில் சுமார் மூவாயிரம் விருப்ப மனுக்கள் குவிந்துவிட்டன. இதில் பழனிசாமி தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று மட்டுமே இரண்டு நாளில் நானூற்றுக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு கொடுத்திருந்தார்கள்.

இந்த நிலையில், சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான தொண்டர்களை கொண்ட கட்சியை களத்திலேயே இல்லாத கட்சி என்று சொல்லி அதிமுக-வை ஒரண்டை இழுத்திருக்கிறார் விஜய். இப்படியான பேச்சை இனியும் அவர் தொடரும் பட்சத்தில் அதிமுக-வும் அவரைத் தாக்க ஆரம்பிக்கும். பதிலுக்கு, தவெக-வும் அதிமுக-வுக்கு எதிரான அம்புகளை நேரடியாக எடுத்து வீசும். இதையெல்லாம் எதிர்பார்த்து பலபேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்!

SCROLL FOR NEXT