தவெக தலைவர் விஜய்
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் 30 தொகுதிகளிலும் அக்கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.
இது குறித்து த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற 09.04.2026 அன்று நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விருப்ப மனு அளித்தவர்களில் இருந்து தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் லாஸ்பேட்டை தொகுதியில் வி. சாமிநாதனும், காரைக்கால் தெற்கில் கே.ஏ.யு. அசனாவும் களம் காண்கின்றனர். மேலும், உழவர்கரை தொகுதியில் எஸ். சசிபாலன், ராஜ்பவன் தொகுதியில் வி.ஜே. சந்திரன், மற்றும் முதலியார்பேட்டையில் என். மணிபாலன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களில் பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது; மங்கலம் தொகுதியில் எம்.கே. சத்யாவும், கதிர்காமம் தொகுதியில் ஆர். ஜெயந்தியும் போட்டியிடுகின்றனர்.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 30 வேட்பாளர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள விஜய், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக, தவெக வேட்பாளர்கள் அனைவரும் 'விசில்' சின்னத்தில் போட்டியிடுவதாகவும், அவர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அவர் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசியக் கட்சிகளுக்கு இடையே தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் நேரடியாகக் களம் காண்பதால், அங்கு தேர்தல் போட்டி மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது.