தமிழகம்

ஈரோட்டில் இன்று பேசுகிறார் விஜய்

செய்திப்பிரிவு

தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த சரளை என்ற இடத்தில் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்துக்காக, இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட விஜயபுரி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில், தவெகவினர் பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்துள்ளனர். பிரச்சாரக் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் விரிவாகச் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஏற்பாடுகளை நேற்று கட்சியின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். இதனிடையே, பிரச்சாரக் கூட்டம் நடைபெறவுள்ள இடத்தில் ஈரோடு எஸ்பி., சுஜாதா நேற்று பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு, அக்கட்சியில் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்புச் செயலாளர் பதவி ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

கரூர் துயர சம்பவத்துக்குப் பின்னர், தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டம் என்பதாலும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவரான செங்கோட்டையனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாலும், பெருந்துறையில் நடைபெறும் விஜய்யின் பிரச்சாரக் கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT