தவெக தலைவர் விஜய்

 
தமிழகம்

‘யார் சொன்னாலும் நம்பாதீர்கள்’ - கூட்டணி இல்லை என்பதில் விஜய் திட்டவட்டம்

செய்திப்பிரிவு

“அந்தக் கூட்டணி, இந்தக் கூட்டணிக்குப் போகிறார் என பொய் பிரச்சாரம் செய்தார்கள். யார் என்ன சொன்னாலும் நம்பாதீர்கள்’’ என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். இதன் மூலம் தவெக யாரோடும் கூட்டணி இல்லை என்பதை விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், காங்கிரஸ் கட்சி தவெக கூட்டணிக்கு வரும் என விஜய் தரப்பு பெரிதும் எதிர்பார்த்தது. ஆனால் அது நடக்கவில்லை. இதையடுத்து, தவெக - பாஜக இடையே கூட்டணி அமையலாம் என்றும், அமித்ஷா இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்றும் தகவல்கள் கசியத் தொடங்கின.இந்த சர்ச்சைகளுக்கும் விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

          

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்று மாலை இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற விஜய் பேசியதாவது:

நாம் அரசியலுக்கு வந்ததில் இருந்ததில் இருந்து சில வதந்திகள் சொல்லப்படுகிறது. அந்த டீம்.. இந்த டீம் என்று சொன்னார்கள். ஆனால் மக்களின் டீம் என எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. அதன்பிறகு வேறு என்ன அவதூறு பரப்பலாம் என நினைந்து செயல்பட்ட போதும் அது நடக்கவில்லை. இப்படியான நேரத்தில்தான் இந்த கூட்டணி, அந்த கூட்டணிக்கு போகிறார் என பொய்யான பிரச்சாரத்தை செய்து கொண்டிருந்தார்கள். அந்த செய்தியையெல்லாம் கேட்டு நீங்கள் குழப்பம் அடைந்து இருப்பீர்கள்.

எனவே நான் மீண்டும் தெளிவாக சொல்கிறேன், நான்.. நாங்கள்.. எப்போதும் மதசார்பற்ற கொள்கை என்பதிலோ, மதசார்பற்ற சமூக நீதி என்ற நிலைபாட்டிலோ சமரசம் வைத்துக்கொள்ள மாட்டோம். நம்முடைய தலைமையில்தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம். நம்முடைய முதல் மாநாட்டில் யாருக்காகவும் எதற்காகவும் எந்தவிதமான சமரசமும் வைத்துக்கொள்ள போவதில்லை. யார் என்ன சொன்னாலும் நம்பாதீர்கள். எல்லாம் வல்ல இறைவனில் அருளால் நாம் நினைத்ததை நிச்சயம் அடைய முடியும். இஸ்லாமிய சகோதரர்களுக்கு எனது ரமலான் நல்வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT