இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகப் பதவியேற்றுக் கொண்ட சத்யபாமா (தாராபுரம்), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சென்னை: தவெக சார்பில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் எம்எல்ஏவாக பதவியேற்றனர்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்யபாமா (தாராபுரம்), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) ஆகியோர் வெற்றி பெற்றனர். அதன்பின் அவர்கள் அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக கட்சியில் இணைந்தனர். தொடர்ந்து மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் கடந்த அக்டோபர் 6-ம் தேதி நடைபெற்றது.
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் தவெக வேட்பாளர்களாக சத்யபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகள் கடந்த 9-ம் தேதி அறிவிக்கப்பட்டன. மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் 20,040 வாக்குகள் வித்தியாசத்திலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமா 9,471 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமைச் செயலகத்தில் அவர்களுக்கு நேற்று பதவி பிரமாணம் செய்து வைத்தார். இரு எம்எல்ஏ.க்களும் உறுதிமொழியை வாசித்து எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள் என்.ஆனந்த், கே.ஏ.செங்கோட்டையன், சிடிஆர்.நிர்மல்குமார், ராஜ்மோகன், கோ.க.ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், நெ.மரியவில்சன், ப.வெங்கடரமணன், சட்டப்பேரவை செயலர் ஆர்.சாந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர். பதவியேற்ற பின்னர் 2 எம்எல்ஏக்களும் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
இதையடுத்து எம்எல்ஏ.க்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த முதல்வர் விஜய்க்கும். எங்களை வாக்களித்து வெற்றி பெறச் செய்த தொகுதி மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
தபால் வாக்குகள் முழுவதும் பணம் கொடுத்து வாங்கப்பட்டன. அவற்றை எல்லாம் கடந்து நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். முதல்வரின் முகத்தை பார்த்து மக்கள் எங்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளனர். மக்கள் இந்த வெற்றியை கொண்டாடுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தற்போது சட்டப்பேரவையில் தவெக எம்எல்ஏ.க்களின் பலம் 109 ஆக உயர்ந்துள்ளது. காங்கிரஸ், விசிக உட்பட கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியை தொடர்ந்தாலும் தனிப்பெரும்பான்மையை பெறுவதற்கான தொடர் முயற்சிகளை தவெக மேற்கொள்ளும். இன்னும் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. நீதிமன்ற வழக்குகள் காரணமாக அவற்றில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே, அடுத்து நடைபெறவுள்ள 5 தொகுதிகளின் இடைத் தேர்தல் தவெகவுக்கு பலப்பரீட்சையாக அமையும்.