தமிழகம்

காங்கிரஸ் எம்.பி.யிடம் மெழுகுவர்த்தியை பிடுங்கி வீசிய தவெக எம்எல்ஏ: திருச்சியில் அரசு விழாவில் பரபரப்பு

தீ.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: திருச்சியில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் குத்துவிளக்கு ஏற்றும்போது புரோட்டோக்கால் பின்பற்றாமல் செயல்படுவதாகக் கூறி காங்கிரஸ் எம்பி கிறஸ்டோபர் திலக்கிடமிருந்து மெழுகுவர்த்தியை பிடுங்கி வீசிய திருவெறும்பூர் தவெக எம்எல்ஏவால் விழா அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில், 240 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா திருச்சி கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ், குத்து விளக்கு ஏற்றி வைத்தார். ஆட்சியர் பிரத்திக் தாயள், தவெக எம்எல்ஏக்கள் மணப்பாறை ஆர்.கதிரவன், முசிறி விக்னேஷ் ஆகியோரைத் தொடர்ந்து தன்னிடம் மெழுகுவர்த்தியை தராமல் காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக்கிடம் கொடுத்தனர்.

அருகில் நின்றிருந்த திருவெறும்பூர் தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜி, கிறிஸ்டோபர் திலக்கிடமிருந்து மெழுகுவர்த்தியை வாங்கினார். இதை சற்றும் எதிர்பார்க்காத எம்பி கிறிஸ்டோபர் திலக் அதிர்ச்சியடைந்தார்.

இதை கவனித்த அமைச்சர் ரமேஷ், ‘எம்பி குத்துவிளக்கு ஏற்றிய பிறகு, நீங்கள் ஏற்றுங்கள்’ என்றதும், ஆத்திரமடைந்த நவல்பட்டு விஜி, ‘என்ன புரோட்டோகால் ஃபாளோ பண்றீங்க. இதுக்கு எதுக்கு என்னை அழைக்கிறீர்கள். நான் கிளம்புறேன்’ என ஆவேசமாகக் கூறி மெழுகுவர்த்தியை தூக்கி தரையில் வீசினார்.

இதனால் மேடையில் இருந்த அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். எம்பி கிறஸ்டோபர் திலக் தர்மசங்கடத்தில் செய்வதறியாமல் நின்றார். கீழே விழுந்த மெழுகுவர்த்தியை அமைச்சர் ரமேஷ் எடுத்துக் கொடுத்து குத்துவிளக்கு ஏற்றும்படி எம்எல்ஏ நவல்பட்டு விஜியிடம் கூறினார். அமைச்சரின் சமாதானத்தை தொடர்ந்து அவர் குத்துவிளக்கு ஏற்றினார்.

தொடர்ந்து சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்ற கர்ப்பிணிகள் அமைச்சர் உள்ளிட்ட எம்எல்ஏகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட போது, புகைப்படம் எடுக்க நின்றபோது, புரோட்டோக்கால்படி தன்னை மதிப்பதில்லை எனக்கூறியும், சீனியரான தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனக்கூறியும் எம்எல்ஏ கதிரவனுடன் நவல்பட்டு விஜி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது கதிரவன், ‘அண்ணே கொஞ்சம் அமைதியா இருங்க...’ என கோபமாக கூறியபோது, இருவருக்கிடையே வாக்குவாதம் முற்றியது. இதைப்பார்த்த அமைச்சர் ரமேஷ் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்தார். இதனால் அரங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ் உள்ளிட்டோர் நவல்பட்டு விஜியை சமாதானம் செய்தனர். அதைத் தொடர்ந்து அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ‘திமுக, அதிமுக உள்ளிட்ட பிறக்கட்சியிலிருந்து விலகி தவெகவுக்கு வந்தவர்களுக்கு தவெகவினர் முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற குறைபாடு உள்ளதே’ என செய்தியாளர்கள் கேட்டபோது, அமைச்சர் ரமேஷ் ‘அதெலெ்லாம் ஒன்றுமில்லை. அனைவருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. புரோட்டோக்கால் படி மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும் என்று தான் எம்எல்ஏ கூறினார். நாங்கள் ஒற்றுமையாக அண்ணன்-தம்பியாக இருக்கிறோம்.

நீங்கள் தேவையில்லாத குழப்பத்தை உருவாக்க வேண்டாம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுகிறோம். ஒரு பிரச்சினையும் கிடையாது’ என்றார். எம்எல்ஏ நவல்பட்டு விஜியும், ‘புரோட்டோகாலை பின்பற்ற வேண்டும் என்று தான் கூறினேன்’ என்றார்.

SCROLL FOR NEXT