குடியரசு துணைத் தலைவரிடம் தவெக எம்எல்ஏ மனு

 
தமிழகம்

மத்திய பல்கலை.யில் புதுச்சேரி மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீடு கோரி குடியரசு துணைத் தலைவரிடம் தவெக எம்எல்ஏ மனு

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு உயர் கல்வியில் 25 சதவீத இடஒதுக்கீடு கோரி குடியரசு துணைத் தலைவரிடம் தவெக எம்எல்ஏ மனு அளித்தார்.

புதுச்சேரி திருபுவனை தொகுதி தவெக எம்எல்ஏ சாய் சரவணன் குமார் டெல்லியில் குடியரசுத் துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து இரண்டு கோரிக்கை கடிதங்கள் அளித்தார்.

அதன் விவரம்: புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்களுக்கு தற்போது புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளில் மட்டுமே 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதனால் பிற துறைகளில் உயர்கல்வி பயில விரும்பும் உள்ளூர் மாணவர்கள் வாய்ப்புகளை இழந்து வருகின்றனர்.

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ். சேர்க்கையில் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. அதேபோன்று புதுச்சேரி பல்கலைக்கழகத்திலும் தற்போது உள்ள மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் அனைத்து பாடப்பிரிவுகளிலும் குறைந்தபட்சம் 25 சதவீத இடஒதுக்கீட்டை விரிவுபடுத்த வேண்டும்.

புதுச்சேரி மாணவர்கள் உடற்கல்வித் துறையில் உயர்கல்வி பயில்வதற்குப் போதிய வாய்ப்புகள் இல்லை. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்பிஎட். படிப்பும், பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரியில் பிபிஇஎஸ். (ஹானர்ஸ்) படிப்பும் வழங்கப்பட்டு வருகிறது. பிஎட். (உடற்கல்வி) பட்டப்படிப்பு அல்லது ஒருங்கிணைந்த உடற்கல்விப் படிப்பை வரும் கல்வியாண்டு முதல் தொடங்க வேண்டும்

இக்கோரிக்கைகளால் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்திய மாணவர்கள் பலன் பெறுவர். உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT