சென்னை: தனது ஜோதிட அலுவலகத்தில் அரசு அதிகாரிகளைச் சந்தித்தது சமூக வலைதளங்களில் சர்ச்சையான நிலையில், அது குறித்து தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோவையின் கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற கனிமொழி சந்தோஷ், தீவிர அரசியலுக்குள் நுழைவதற்கு முன்பாக ஜோதிடராக வலம் வந்தவர். அவர் பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடினேன் என மூன்று புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.
அதில், மிகப் பெரிய சோபாவில் எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் அமர்ந்திருக்க, அவருக்கு எதிரே அரசு அதிகாரிகள் பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்திருந்தது போல இருந்தது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் கேள்விகள் எழுப்பினர். இந்நிலையில், உடனடியாக ஒரு வீடியோ வெளியிட்டு அவரது நிலைமையை விளக்கியிருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எனது அன்பு மக்களுக்கும், நண்பர்களுக்கும் ஒரு தகவல். பல ஆண்டுகளாக நான் ஜோதிடராக மக்களை சந்தித்து வந்த எனது பழைய ஜோதிட அலுவலகம் இன்று வரை மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் சுமந்து நிற்கிறது. அந்த அலுவலகம் எனது வாழ்க்கைப் பயணத்தின் முக்கியமான நினைவுகளை தாங்கி நிற்கும் ஓர் இடம்.
தற்போது, எனது புதிய எம்எல்ஏ அலுவலகத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அலுவலகத்தின் பெயின்டிங் மற்றும் பிற பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. மக்கள் பயன்பாட்டுக்கு சிறப்பாகவும், அனைவரும் எளிதாக சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைக்கக் கூடிய வகையிலும் அதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
அந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை, வழக்கம்போல நான் எனது பழைய ஜோதிட அலுவலகத்திலேயே பொதுமக்கள், அதிகாரிகள் மற்றும் என்னைச் சந்திக்க விரும்பும் அனைவரையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து வருகிறேன். எனக்கு மக்கள் சேவையே முதன்மை. அலுவலகம் எந்த இடத்தில் இருந்தாலும், மக்களின் நலனுக்காக என் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும்.
புதிய எம்எல்ஏ அலுவலகம் முழுமையாக தயார் ஆனவுடன், மேலும் சிறப்பான சூழலில் அனைத்து பொது மக்களையும் அங்கு சந்தித்து, உங்கள் தேவைகள் மற்றும் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க உறுதியாக உள்ளேன். உங்கள் அன்பும், ஆதரவும், நம்பிக்கையும் எனக்கு என்றும் உறுதுணையாக இருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் எனது அலுவலகத்துக்கு அரசு அதிகாரிகளை வரவழைத்து, அவர்களை பிளாஸ்டிக் நாற்காலியில் அமரவைத்து அவமரியாதை செய்ததாக ட்ரோல் செய்கிறார்கள். இது எனது ஜோதிட அலுவலகம். இங்கு யார் வேண்டுமானாலும் வரலாம். இது லெதர் நாற்காலி. என்னை சந்திக்க வருவர்களுக்கு நல்ல தரத்தை தான் தருகிறேன்.
நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக ஜோதிடராக இருந்தேன். நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக சமூக செயல்பாட்டாளாராக இருந்தேன். தவெக தலைவர் விஜய்யால் எனக்கு அரசியலில் வர வாய்ப்பு வந்தது.
நான் எந்த அதிகாரியையும் வீட்டுக்கு வரவழைத்து ஊக்குவிப்பதும் கிடையாது. எனக்கும் அரசியல் நாகரிகம் தெரியும். எனது அலுவலகத்தில் தான், நான் அவரை சந்தித்தேன். யாரும் தவறாக நினைக்க வேண்டும். மக்களுக்காக பணி செய்ய தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். தலைவர் விஜய்க்கு எந்த விதமான பங்கமும் ஏற்பட விடமாட்டேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.