கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ்

 
தமிழகம்

தவெக எம்எல்ஏ விவகாரம்: கள்ளக்குறிச்சி நீதித்துறை நடுவரிடம் ஆட்சியர் ரகசிய வாக்குமூலம்

என்.முருகவேல்

கள்ளக்குறிச்சி: தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு நிலவும் சூழலில், கள்ளக்குறிச்சி மாவட்ட நீதித்துறை நடுவரிடம் இன்று மாவட்ட ஆட்சியர் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தார்.

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விரும்பத்தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், பாலியல் ரீதியாக அணுகியதாகவும், அவர் மீது மாவட்ட எஸ்பியிடம் கடந்த 23-ம் தேதி மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், ஆட்சியரின் உதவியாளர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பூர் எஸ்பி சிருஷ்டிசிங் தலைமையில் விசாரணைக்குழுவும் அமைக்கப்பட்டது.

இதனிடையே, ஆட்சியர் புகார் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின்படி நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரியான திருப்பூர் மாவட்ட எஸ்பி சிருஷ்டி சிங் இன்று காலை கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கள்ளக்குறிச்சி எஸ்பி ஷானாஸிடம் ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனையின்போது, நேற்று வரை நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் அடங்கிய கோப்புகளை, விசாரணை அதிகாரியிடம் கள்ளக்குறிச்சி எஸ்பி வழங்கியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து பிற்பகல் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற விசாராணை அதிகாரி சிருஷ்டி சிங், ஆட்சியரிடமும் விசாரணை நடத்தினார்.

இதனிடையே, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி நேற்று கள்ளக்குறிச்சி கச்சிராயாப்பாளையம் சாலையில் உள்ள தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் இல்லத்துக்கு விசாரணைக்காக சென்றபோது, வீடு பூட்டப்பட்டிருந்தது. பின்னர் பூட்டு திறக்கப்பட்டு உள்ளே சென்ற ஆய்வாளர், எம்எல்ஏவிடம் சம்மனை வழங்கி விட்டுச் சென்றார்.

இதைத் தொடர்ந்து விசாரணை அறிக்கைகள் ஒருபுறம் தயாராகிவரும் சூழலில், வழக்குக்கு வலு சேர்க்கும் வகையில் கள்ளக்குறிச்சி நீதித்துறை நடுவர்-2 சுவாதி அழகப்பனிடம், மாவட்ட ஆட்சியர் ரகசிய வாக்குமூலம் அளித்தார். இதன்மூலம் இந்த வழக்கில் நீதித்துறை நடுவரும் ஒரு சாட்சியாக அமையக்கூடும்.

இந்த வழக்கின் போக்கில், பல்வேறு அழுத்தம் காரணமாக அருள் விக்னேஷ் சம்பவங்களை திருத்தி பேசும் பட்சத்தில், நீதித்துறை நடுவரிடம் அளிக்கும் வாக்குமூலம் வழக்கின் முக்கிய சாட்சியமாக இருக்கும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT