சென்னை: உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவுக்கு ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திமுகவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வடசென்னையின் முகமாக அறியப்பட்டவர் வி.எஸ்.பாபு. வடசென்னை மாவட்ட செயலாளராகவும் இருந்தார். கடந்த 2006-ம் ஆண்டு புரசைவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு முதல் முறையாகச் சட்டப்பேரவைக்குள் நுழைந்தார்.
கடந்த 2011-ல் தொகுதி மறுசீரமைப்பின் போது புரசைவாக்கம் தொகுதி நீக்கப்பட்டு, அதன் பெரும்பகுதிகள் மற்றும் வில்லிவாக்கம் தொகுதியில் சில பகுதிகள் சேர்த்து கொளத்தூர் தொகுதி உதயமானது. கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வி.எஸ்.பாபு திட்டமிட்டிருந்தார். ஆனால், அப்போது துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின், ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து கொளத்தூர் தொகுதிக்கு மாறினார். இதனால் வி.எஸ்.பாபுவுக்கு அந்த தேர்தலில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அந்த வேளையில் அதிமுகவில் இருந்து திமுகவில் நுழைந்த பி.கே.சேகர்பாபுவுக்கு வடசென்னை மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வி.எஸ்.பாபு அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரன் அணியில் இருந்ததால், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பிறகு, 2026 தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து, வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதற்காக, வி.எஸ்.பாபுவை கட்சியில் சேர்த்து, அதிமுக மாவட்ட செயலாளர் பதவியையும் பழனிசாமி வழங்கினார்.
எனினும், கடந்த பிப்ரவரி மாதம் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்து, அப்போதைய முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் போட்டியிட்டார் வி.எஸ்.பாபு. தேர்தலில் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலினைத் தோற்கடித்து தமிழகம் மட்டுமல்லாது நாட்டின் கவனத்தை ஈர்த்தார். அவர் கையசைத்து சைகை செய்த செயல், தவெக தொண்டர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆனது. எம்எல்ஏவாகப் பதவியேற்ற பிறகு, சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரிலும் அவர், பங்கேற்றார்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 9-ம் தேதி மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக, சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வி.எஸ்.பாபு அனுமதிக்கப்பட்டார். முதல்வர் விஜய், சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் நேரில் சென்று வி.எஸ்.பாபுவிடம் நலம் விசாரித்து, அவருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
மருத்துவமனையில் 72 நாட்களாகத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக பிற்பகல் 2.24 மணிக்கு வி.எஸ்.பாபு உயிரிழந்தார். இந்தத் தகவலை மருத்துவமனை நிர்வாகம் நேற்று மாலை அறிவித்தது. அதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு விரைந்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, வி.எஸ்.பாபுவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பெரம்பூரில், மாதவரம் நெடுஞ்சாலை - மேல்பட்டி பொன்னப்பன் தெரு சந்திப்பு அருகில், திருநாவுக்கரசு தெருவில் உள்ள வி.எஸ்.பாபுவின் இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் விஜய் அங்குச் சென்று வி.எஸ்.பாபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மறைந்த பாபுவின் உடலுக்கு ஏராளமான அரசியல் தலைவர்கள், எம்எல்ஏக்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று பிற்பகல் 2 மணிக்கு மேல் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது. பின்னர் பல்லவன் சாலையில் உள்ள தாங்கல் மயானத்தில் மாலை 4 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
முன்னதாக, மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் ஆதவ் அர்ஜூனா கூறும்போது, ‘‘தவெக தலைவர் விஜய்யுடன் சேர்ந்து பணியாற்றியவர் வி.எஸ்.பாபு.
குறிப்பாக வடசென்னை முகமாகவும், வடசென்னை மொழியைப் பேசக் கூடியவராகவும் இருந்தார். வடசென்னை மக்களுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவரது மறைவு, ஒரு குடும்பத்துக்கான இழப்பு மட்டுமில்லை. வட சென்னைக்கே பேரிழப்பு’’ என்றார்.
7 நாள் துக்கம்
வி.எஸ்.பாபு மறைவைத் தொடர்ந்து, நேற்று முதல் 7 நாட்களுக்கு தவெக கட்சி சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த 7 நாட்களுக்கும் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கழகக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்" என பொதுச்செயாளர் என்.ஆனந்த் அறிவித்துள்ளார்.
ஆளுநர், முதல்வர், ஸ்டாலின் இரங்கல்
கொளத்தூர் எல்எல்ஏ வி.எஸ்.பாபு மறைவையொட்டி தமிழக ஆளுநர், முதல்வர் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்: வி.எஸ்.பாபுவின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனையும் வருத்தமும் அடைந்தேன். ஈடுசெய்ய முடியாத இந்தப் பேரிழப்பைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமையையும் தைரியத்தையும் அவரது குடும்பத்தினருக்கு இறைவன் வழங்கிட பிரார்த்தனை செய்கிறேன்.
முதல்வர் விஜய்: பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த வி.எஸ்.பாபுவின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பாபுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன்: கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு எனது நீண்டகால நெருங்கிய நண்பர். துடிப்பானவர். தவெகவில் இணைந்து அவர் ஆற்றிய பணி மிகவும் மகத்தானது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், தவெகவினர், கொளத்தூர் தொகுதி மக்கள் ஆகியோருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, விசிக தலைவர் திருமாவளவன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வி தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, ஐஜேகே கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, தவாக தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.