நயினார் நாகேந்திரன்
சென்னை: “தவெக அமைச்சர்களுக்கு துறை சார்ந்த எந்த விஷயமும் தெரியவில்லை” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைமையகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழக மக்களுக்குத் தேவையானதைக் கேட்க வேண்டியது மாநில அரசின் கடமை, அதை வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை.
தமிழக பாஜகவுக்கு ‘வந்தே மாதரம்’ பாடலும் வேண்டும், ‘தமிழ்த்தாய் வாழ்த்தும்’ வேண்டும். வந்தே மாதரம் பாடப்படுவதில் எவ்விதத் தவறும் இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்தைப் போலவே வந்தே மாதரம் பாடலும் முக்கியமானது.
தமிழகத்தில் ஒரு புதிய அரசு பொறுப்பேற்றால், அவர்களுக்கு 3 முதல் 6 மாதங்கள் வரை அவகாசம் கொடுக்க வேண்டும். ஆனால், தற்போதைய தவெக அரசுக்கும், கடந்த கால திமுக அரசுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள், கஞ்சா விற்பனை மற்றும் படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கவலையளிக்கிறது. 10 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை அனைவரும் அச்சப்படும் சூழலே நிலவுகிறது.
தமிழகம் முழுவதும் மின்வெட்டுப் பிரச்சினை பெரும் சுமையாக மாறியுள்ளது. இதற்குப் பணியாளர்களே காரணம் என அமைச்சர் கூறுகிறார். மேலும், கல்குவாரிகள் மூடப்பட்டுள்ளதால் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இது பொதுமக்களுக்குப் பெரும் சுமையாக உள்ளது. அமைச்சர்களுக்குத் துறை சார்ந்த விஷயம் எதுவும் தெரியவில்லை. முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.