சென்னை: ‘போதைக்கு எதிரான மாராத்தான் போட்டிகளை நடத்திக் கொண்டு நாங்களும் போதை ஒழிப்பில் ஈடுபடுகிறோம் என்று வெற்றுப் பெருமை பேசி போதைப் பொருள் ஒழிப்பில் ஆமை வேகத்தில் செயல்படுகிறது தவெக அரசு’ என பாஜகவின் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘போதைப் பொருளுக்கு எதிராக மாரத்தான் போதாது, ஜெட் வேகத்தில் நடவடிக்கைகள் வேண்டும். சென்னை மாதவரத்தில் ஐஸ் விற்கும் வாகனத்தில் சுமார் ரூ.140 கோடி மதிப்பிலான 70 கிலோ ஹெராயின் போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்திருப்பதாக கூறும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த மாதம் நாகப்பட்டினத்தில் முன்னாள் தவெக நிர்வாகியாக இருந்த பூபாலன் மெத்தம்பெட்டமைன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது தலைநகரிலேயே இத்தகைய கடத்தல் அம்பலமாகியிருப்பது தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
கிலோ கணக்கில் போதைப்பொருட்களின் புழக்கம் தமிழகத்தில் சர்வசாதாரணமாக நடக்கிறது எனில் இதனைத் தடுக்க வேண்டிய தவெக தலைமயிலான தமிழக அரசோ போதைக்கு எதிரான மாராத்தான் போட்டிகளை நடத்திக் கொண்டு நாங்களும் போதை ஒழிப்பில் ஈடுபடுகிறோம் என்று வெற்றுப் பெருமை பேசி போதைப் பொருள் ஒழிப்பில் ஆமை வேகத்தில் செயல்படுகிறது.
ஸ்போர்ட்ஸை எடு ட்ரக்ஸை விடு, ஸ்டார்ட் ரன் ஸ்டாப் ட்ரக்ஸ் என்று முழக்கமிட்டு விளம்பரம் தேடுவதால் மட்டும் போதைப் பொருள்கள் புழக்கம் ஒழிந்துவிடாது முதல்வர் விஜய். போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மற்றும் மாஃபியாக்களை ஒடுக்குவதிலும் அதே வேகத்தைக் காட்ட வேண்டும்.
குறிப்பாக, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை வேரறுக்கவும், மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து மாநிலம் முழுவதும் தீவிர சோதனைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு முன்வர வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.